வாஷிங்டன்: “என்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல். அதை உறுதி செய்யும் வகையில் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்வோம்’ என்ற பேனரை ஏந்தி இருந்தனர். இந்தச் சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் உள்ளவரை (அதாவது என்னை) படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட ஈரான் முயன்றால், அதை எதிர்கொள்ளும் வகையில் அந்த தேசத்தை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன.
ஈரானின் அனைத்து பகுதிகளையும் தாக்குவதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க ராணுவமும் அதற்கு தயாராக உள்ளது. இந்த உத்தரவு ஓராண்டு காலம் அமலில் இருக்கும். அது நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா மீண்டும் மோதல்
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றன. இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் உட்பட 14 அம்சங்கள் அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றன.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. எனினும், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடியாக ஈரானின் துறைமுக நகரங்கள் பந்தர் அப்பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்களில் அமெரிக்கா நேற்று முன்தினம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வான் பாதுகாப்புக் கருவிகள், ரேடார் மையங்கள், ஏவுகணை தளங்கள், 60-க்கும் மேற்பட்ட கடற்படை படகுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு மையம் சென்ட்காம் தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை கோரிய ஈரான்
“பேச்சுவார்த்தையை தொடர ஈரான் எங்களிடம் கோரியது. அதை நாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்களிடம் தெளிவாக அமெரிக்கா சொல்லியுள்ளது” என்று இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

More Stories
பேச்சுவார்த்தை கோரிய ஈரான்: அமெரிக்கா ஏற்பு என ட்ரம்ப் அறிவிப்பு
கடலில் ‘வலை’ மூலம் ராக்கெட்டை பத்திரமாக மீட்டு அசத்தல்: விண்வெளித்துறையில் சீனா புதிய சாதனை
நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் லக்சன்