எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் உதவியை கோரும் உலக நாடுகள்
புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு பேரலின் விலை 100 டாலரை தாண்டியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் வயல்கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான எண்ணெய் வயல்கள் மூடப்பட்டு உள்ளன.
மேலும் ஹார்முஸ் வளைகுடாவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது. இந்த வளைகுடா வழியாக உலகின் 25% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியிருப்பதால் அதன் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஈரான் போருக்கு முன்பாக ஒரு பேரல் (159 லிட்டர்) கச்சா எண்ணெய் விலை 65 டாலர் முதல் 70 டாலராக இருந்தது.
போருக்கு பிறகு படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் ஒரு பேரல் பிரன்ட் கச்சா எண்ணெய் 120 டாலரை எட்டியது. பின்னர் படிப்படியாகக் குறைந்து 100 டாலரை ஒட்டி வர்த்தகமானது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டனில் 2 நாட்களுக்கு தேவையான இயற்கை எரிவாயு மட்டுமே இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் உதவியை உலக நாடுகள் நாடி உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் படிப்படியாக குறைத்து வந்தன. தற்போதைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்திய நிறுவனங்கள் மீண்டும் அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன.
இந்தியாவில் 23 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசலாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீங்கும், கச்சா எண்ணெய் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதை கருத்தில் கொண்டே ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்க அரசு சிறப்பு அனுமதியை வழங்கி உள்ளது.

More Stories
சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடல்: பெங்களூரு உணவக சங்கம் அறிவிப்பு
மார்ச் 11-ல் பிரதமர் மோடி திருச்சி வருகை..- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! சூடுபிடிக்கும் அரசியல்களம்!
ஈரானின் புதிய உச்ச தலைவர்: தந்தை மறைவுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா கமேனி