சென்னை: உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கின்றனர், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நுரையீரல் நிபுணர் மருத்துவர் நரசிம்மன் கூறியதாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே-31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இளைஞர்களை புகையிலை மற்றும் நிக்கோட்டின் பழக்கத்திலிருந்து பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகையிலை நேரடியாக உட்கொள்வது மூலமாகவும், 16 லட்சம் பேர் மறைமுகமாகவும் உயிரிழக்கின்றனர்.
தற்போது பெரியவர்கள் மத்தியில் புகை பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வேப்பிங் (இ-சிகரெட்) கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
புகையிலையை உட்கொள்வதை விட இது பாதுகாப்பானது என்ற தவறான எண்ணம் உள்ளது. புகையிலையை புகைப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படுமோ அவை அனைத்தும் இந்த வேப்பிங் மூலமாகவும் வரும்.
இது இளைஞர்களின் மூளை வளர்ச்சியையும், மனநலத்தையும் பாதிக்கிறது. மேலும் மற்ற போதைப்பழக்கத்துக்கு தொடக்க புள்ளியாகவும் அமைந்துவிடுகிறது.
நீண்ட காலமாக புகைப்பிடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் தான் உயிரிழக்கின்றனர். புகைப்பிடித்தல் என்பது நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், காச நோய் மற்றும் பல்வேறு சுவாச நோய்களுக்கு நேரடி காரண மாக உள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இளைஞர்களை ஆரம்ப கட்டத்திலேயே புகைப்பழக்கத்தில் இருந்து தடுத்துவிட்டால், அவர்களுடைய எதிர்காலம் புகையில்லா எதிர்காலமாக, ஆரோக்கியமானதாக இருக்கும்.
பெற்றோரும் ஆசிரியர்களும் புகையிலை இல்லாத முன்னுதாரணங்களாக இருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More Stories
தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்
“அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை” – லீமா ரோஸ் விளக்கம்