August 18, 2026

“கர்நாடக மாநில நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது” – டி.கே.சிவகுமார்

பெங்களூரு: “எந்த மாநிலமும் மற்ற மாநிலத்தின் நிர்வாக விஷயத்தில் தலையிடக் கூடாது,” என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த முதல்வர் டி.கே. சிவகுமார், “ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படைப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிக் காப்பது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும், நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாம் நமது பணியைச் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதிகாலை​யில் மானை வேட்​டையாடியதாக அந்தோணி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்​மாநில வனத்​துறை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த சம்பவம் அங்கு ​​பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யதை தொடர்ந்​து, வனத்​துறை அலு​வல​கங்​கள் சூறை​யாடப்​பட்​டன.

கர்​நாடக வனப்​பகு​தி​யில் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட‌ 3 தமிழர்​களின் உடல்​களும் இறுதி திருப்​பலிக்கு பின்​னர், அவர்​களின் சொந்த கிராமங்​களில் நேற்று அடக்​கம் செய்​யப்​பட்​டன.

இந்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love