சென்னை: ‘கவிஞர்கள் எழுத்தாளர்களை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பாராட்ட வேண்டும்’ என விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
பாரதியார் சங்கம் சார்பில் 77-ம் ஆண்டு பாரதி பெருவிழா மற்றும் பாரதி விருதுகள் வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது.
இதில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் கலந்துகொண்டு பாரதி விருதுகளை வழங்கினார்.
விஜிபி குழுமத்தை சேர்ந்த ஜோன் ராஜா தாஸ், எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார், பேராசிரியை களக்காடு ராமசீதாலட்சுமி, கோமல் தியேட்டர்ஸ் நிர்வாகி தாரணி கோமல், பரதநாட்டிய கலைஞர் எச்.என்.நந்தினி சுரேஷ் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் கோ.விசுவநாதன் பேசியதாவது: இன்றைய தினம் பாரதியாரை நினைக்கிறோம். அவரைப் பாராட்டுகிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலங்களில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பாராட்ட வேண்டும்.
தமிழகத்தில் 23 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் 17 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லை.
அரசு – ஆளுநர் இடையிலான பிரச்சினைதான் இதற்குக் காரணம். தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பாரதிய வித்யா பவன் இயக்குநர் கே.என்.ராமசாமி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண் இயக்குநர் எம்.முரளி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, பாரதியார் சங்கத்தின் தலைவர் பேராசிரியை உலகநாயகி பழனி வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக பொறுப்பாளர்கள் நியமனம்
2.38 லட்சம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் பயிர்க் கடன் தள்ளுபடி வழங்க அரசாணை
மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு