October 14, 2026

கிருஷ்ணகிரி அணை பகுதியில் ரூ.9 கோடியில் வளர்ச்சி பணிகள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சுற்றுலாத்துறை சார்பில் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு கூட்டம் நடந்தது.

கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

அவதானப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் நடக்கிறது. கிருஷ்ணகிரி அணை பகுதியில் தேவையான சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஏரியை அழகுப்படுத்துதல், நடைபாதை அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல், காட்சி கோபுர விளக்கு அமைத்தல் ஆகிய வசதிகளை ஏற்படுத்துவற்கு விரிவான திட்ட அறிக்கை கோரப்படும். டெங்கு காய்ச்சல் பரவுதலை கட்டுப்படுத்த அனைத்து சுற்றுலா தலங்களிலும் நீர் தேங்காதவாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

நீர்வளத்துறை, வனத்துறை, அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சி துறை, கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி ஆகிய துறைகள் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்களை தேசிய தகவல் மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக 10 எம்பிக்கு குறைவான உரிய புகைப்படங்களை வழங்குவது குறித்தும், சுற்றுலா பயணிகள் வருகை புள்ளிவிவரங்களை மாதந்தோறும் 5ம் தேதிக்குள் தொடர்புடைய துறைகள் அனுப்பி வைப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவை சங்கமாக பதிவு செய்வதற்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆதார நகலை பெறுவது, மாவட்டத்தில் அமைந்துள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் குறித்து பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து தகவல் பெறுவது, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சிறிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவிற்கு நிதி ஆதாரம் பெறுவது குறித்தும், ஓசூரில் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி கலெக்டர் (பயிற்சி) சாய் சைதன்யா ஜாதவ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Spread the love