வரைபடங்கள், விநியோகஸ்தர்களின் விவரங்கள்
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள், இணைய உலகத்தின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் ‘டார்க் வெப்’பில் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணுமின் நிலையத்தின் சில பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விவரங்கள் அடங்கிய இந்த ஆவணங்கள், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து திருடப்பட்டவை என ‘வேர்ல்ட் லீக்ஸ்’ என்ற ரான்சம்வேர் ஹேக்கர் குழு தங்களது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் அணுசக்தித் திறனை மேம்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதன் யூனிட் 3 மற்றும் யூனிட் 4 ஆகிய புதிய பிரிவுகளுக்கான உள்கட்டமைப்புகளை வடிவமைத்து உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை, கடந்த 2018-ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் பெற்றது.
2027-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த இரு பிரிவுகளும் இணைந்து 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தரவுச் சேமிப்பகத்திலிருந்து இந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரிலையன்ஸ் குழுமம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள விளக்கத்தில், “இந்தியாவின் மூன்றாம் தரப்பு தரவு மைய சேவை வழங்குநரான ‘யோட்டா’ நிறுவனத்தின் சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எங்களது தரவுகளில் ஒரு பகுதி கசிந்துள்ளதை ஒப்புக்கொள்கிறோம். இது குறித்து மத்திய அரசுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
தீவிர விசாரணை
எனினும், எந்தெந்த ஆவணங்கள் கசிந்துள்ளன என்ற விவரத்தை ரிலையன்ஸ் வெளியிடவில்லை. இந்தத் தரவு கசிவு தொடர்பாக இந்திய கணினி அவசரக்காலப் பொறுப்புக் குழு (CERT-In) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Stories
மணிப்பூரில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் திட்டத்தை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து வெளியுறவு அமைச்சர் புகழாரம்
சூரியசக்தி ரயில் திட்டத்துக்கு கேரள நிபுணர் குழு எதிர்ப்பு