May 31, 2026

கே.கே.நகர், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை: இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்காக வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் சென்னை கே.கே.நகர், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) கழகம், இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளிகளுக்காக வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாடுமுழுவதும் கடந்த மே 7-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கே.கே. நகர், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இம்முகாம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.‌ ஆண்டு முழுவதும் நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் ரத்தம், கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, இசிஜி, தைராய்டு பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக, சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல இயக்குநர் வேணுகோபால் பேசும்போது, “புதிய தொழிலாளர் சட்டத்தின்கீழ் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்ட இஎஸ்ஐ பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வழங்கப்படும் இந்த இலவச வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இஎஸ்ஐ-யில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்கள் இந்த வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை வசதியை பயன்படுத்திக் கொள்ள சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவை, ahcpesic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது 044-28306398 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் மூலமாகவோ தொடர்புகொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Spread the love