சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றம், சந்தேகத்துக்குரிய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சென்னையில் 2 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை வந்து, சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரின் வீட்டிலும் அதே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 இடங்களிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால், பரபரப்பான நிலை காணப்பட்டது.
இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது. இதில் வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், சொத்து தொடர்பான பத்திரங்கள், கணினி ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தடயவியல் மற்றும் நிதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் சந்தேகத்துக்குரிய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கின் முழு விவரங்களையும் தற்போது வெளியிட முடியாது. சோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் கூறினர்.

More Stories
“கரூரில் முதல்வர் விஜய் பேசியது அருவருக்கத்தக்கது” – ஜெயக்குமார் காட்டம்
”காசி தமிழ் சங்கமம்; ஆர்.என்.ரவிக்கு நன்றி” – தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர்
5 தொகுதிகளில்.. இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி