July 24, 2026

“சிஜேபி போராட்டத்துக்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள்” – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களுக்கப் பின்னால் வெளிநாட்டு சக்திகள் உள்ளதாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தின் இடையே கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்லப் போவதாக சிஜேபி சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்த போராட்டத்தால் டெல்லயில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் ஜந்தர் மந்தரில் சிஜேபி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், “நாட்டில் நிலவும் ஆக்கப்பூர்வமான சூழலை சீர்குலைக்கும் முயற்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்தாலும், பின்னர் அவர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகி தங்கள் சொந்த அரசியலைச் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஜந்தர் மந்தருக்குச் செல்லும் இளைஞர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த, வலிமையான, கல்வியறிவு பெற்ற நாடாக மாறுவதை விரும்பாத உள்நாட்டு மற்றும் உலகளாவிய சக்திகள் இந்த போராட்டத்துக்குப் பின்னால் உள்ளன. அவர்கள் இந்தியாவை அழிக்கவே விரும்புகிறார்கள்.

ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஸ்டார்ட்-அப்கள் மூலம் இன்று இந்தியா ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த முன்மாதிரியை உருவாக்குவதில் அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.

உங்கள் பங்கைச் சுதந்திரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் ஆற்றுங்கள். அப்போதுதான், இந்தியாவின் வளர்ச்சி, கல்வி, செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க உலக வல்லரசுகள் முயன்றபோதும் இத்தகைய மக்களும் இளைஞர்களும்தான் தங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றினார்கள் என்பதை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்வார்கள்.

உங்களால் எந்த நன்மையும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் எதையும் அழிக்காதீர்கள். மற்றவர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து பொறாமைப்பட்டு அதை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள். இது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு செயல்படக்கூடாது.

பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசிய தலைவர்களிடம் இருந்து உத்வேகம் பெற்று நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love