September 3, 2026

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்: முதல்வர் விஜய்

சென்னை: “சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும்,” என விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லும் வகையில், தமிழகம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும்.

இந்த ஒலிம்பிக் நகரம், ஒலிம்பிக் தரத்திலான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகமாக உருவாக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre), விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

இந்த வளாகம், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு உதவும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்” என்று தெரிவித்தார்.

Spread the love