சென்னை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேலும், மத்திய அரசு நீட்டை முழுமையாக ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மதிக்கும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அதற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்க காலம் முதலான உறுதியான கொள்கையாகும். நீட் என்பது சமூக நீதிக்கு எதிரானதும், ஏழை, எளிய, கிராமப் புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் அநீதியான தேர்வு முறையுமாகும்.
தேர்வு முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும் நீட் தேர்வின் நம்பகத் தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், மத்திய அரசு நீட்டை முழுமையாக ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மதிக்கும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை உறுதி செய்ய வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

More Stories
“சோனம் வாங்சுக் உடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – சீமான்
குதிரை பேரம் விவகாரம்: டிஜிபியிடம் புகார் மனு அளித்த அதிமுக நிர்வாகிகள் கூறியது என்ன?
‘கோவை செம்மொழி பூங்கா பணியில் ரூ.40 கோடி முறைகேடு’ – மேயர் பதிலளிக்க வலியுறுத்தி அமளி