April 11, 2026

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய அமைச்சர் எல். முருகனும்தான் காரணம் என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், படத்தின் சில காட்சிகளுக்குத் தணிக்கைக் குழு ஆட்சேபம் தெரிவித்ததால், வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

இதற்கிடையில் விஜய் முழுநேரத் தேர்தல் களத்தில் இறங்கியதால், இப்படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஆரம்பக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முழுத் திரைப்படமுமே இணையத்தில் கசிந்திருப்பது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி

யுள்ளது.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அது சாட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது சாட்டிலைட் பாஜகவின் வசமே உள்ளது. எனவே, திட்டமிட்டுப் படத்தை இணையத்தில் கசியவிட்டு, விஜய்க்கும் தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி மிரட்டியிருக்கிறார்கள். இதற்கு துணை முதல்வர் உதயநிதியும் மத்திய அமைச்சர் எல்.முருகனும்தான் காரணம். விஜய்க்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தினாலும், தமிழக மக்களே அவருக்கு அரணாக இருப்பார்கள்.

தொடர்ந்து படத்தைத் திரையிட விடாமல் முட்டுக்கட்டைப் போடும் எல். முருகன், உதயநிதியின் செயல்களுக்குப் பின்னால் முதல்வர் ஸ்டாலின் மூளையாகச் செயல்படுகிறார். இன்னும் 10 நாட்களில் விஜய்யை எப்படியெல்லாம் தாக்க முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் போலிப் பிரச்சாரங்கள் மூலம் செய்வார்கள். ஆனால், மக்கள் அவரது கண்ணீருக்குத் தேர்தல் வெற்றி மூலம் பதில் தருவார்கள்.

அன்று எம்ஜிஆருக்கு திமுக மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. மதுரையில் அவரது திரைப்படப் பெட்டிகளை திமுகவினர் தூக்கிச் சென்ற வரலாறும் உண்டு. இன்று அதையே சாட்டிலைட் தொழில்நுட்பம் மூலம் நவீனமாகச் செய்கிறார்கள். இதற்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் மகேஷ் பொய்யாமொழிதான் பொறுப்பு. அன்று முதல் மக்கள் இவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் இப்போது தவெக-விற்குப் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love