June 5, 2026

ஜூன் 5 | உலக சுற்றுச்சூழல் தினம்.. கடந்த 200 ஆண்டுகளில் மனிதர்களால் நேர்ந்த பாதிப்பு!

“பூமி என்பது முன்னோர்கள் நமக்குக் கொடுத்த சொத்தல்ல; வருங்காலத் தலைமுறையிடம் நாம் வாங்கிய கடன்” — இந்த வரிகளை நினைவுகூர வேண்டிய நாள் இன்று. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புதிய தலைமுறை காலநிலை அணி வழங்கும் இந்தச் சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

உலகின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகள், கடந்த 40 ஆண்டுகளில் ஐந்தில் ஒரு பகுதியை இழந்துள்ளன. பூமியின் குளிர்சாதனப் பெட்டியான ஆர்க்டிக், 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து, 10 ஆண்டுகளுக்கு 12% பனிப்பரப்பை இழந்து வருகிறது. பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைத் திரட்சி, தமிழகத்தை விட 12 மடங்கு பெரியது!

இந்த சுற்றுச்சூழல் அழிவுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. உலக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள் தொடர்ந்து இடம்பிடிக்கின்றன. இங்கு ஒரு நபர் ஆண்டுக்கு 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறார். கடந்த 20 ஆண்டுகளில் வெப்ப அலை, கடும் மழை, வெள்ளம் போன்ற தீவிர இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம், இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடக்கும் குவாரி சுரண்டல்கள் இயற்கை வளங்களை நசுக்குகின்றன.

கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மனித இனம் தோன்றியதில் இருந்து மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை விட கடந்த 200 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் மிக அதிகம் என்கிறது விஞ்ஞான உலகம். இந்தத் தீவிரத்தை உணர்ந்து சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் உள்ளது. இதனால்தான் 1974 முதல் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையைக் காப்பது அரசுகளின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

Spread the love