புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதி உமர் முதலில் ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் போக்குவரத்து நெரிசலால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியதாகவும் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், “கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தற்கொலைப்படை தீவிரவாதியான உமர் நபியின் நடமாட்டத்தை ஆய்வு செய்ததில், அவர் டெல்லியின் மிகவும் பழமையான ஜெயின் கோயிலான லால் மந்திரில் தாக்குதல் நடத்த முதலில் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. எனினும் மத்திய டெல்லி போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீஸாரின் கண்காணிப்பு காரணமாக கடைசி நிமிடத்தில் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் லால் மந்திர் நோக்கி சென்று கொண்டிருந்த அவர், யூ-டர்ன் அடித்து செங்கோட்டையை அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரிலிருந்து குண்டு..
மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் “நபி மற்றும் அவரது கூட்டாளியான ஷாஹீன் சயீத் ஆகியோருக்குச் சொந்தமான பென் டிரைவ்களில் கண்டெடுக்கப்பட்ட பிடிஎஃப் கோப்புகளில், யூரியா நைட்ரேட்டைப் பயன்படுத்தி வெடிபொருட்கள் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சிறுநீரிலிருந்து யூரியாவைப் பிரித்தெடுப்பதற்கான முறையும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நபியின் அறையில் சிறுநீர் நிரம்பிய ஒரு பாலித்தீன் பையைக் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியளித்தார். இதன் மூலம் நபி, சிறுநீரில் இருந்து குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது உறுதியானது” என கூறப்பட்டுள்ளது.

More Stories
‘டொனால்ட் ட்ரம்ப் திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ – ஸ்ரீதர் வேம்பு
காட்பாடி அருகே தேவாலயம் கட்டுமான பணியில் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
டெல்லியில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பது உறுதி