இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக பாஜக கண்டனம்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மேலாடையை களைந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த சூழலில் 5-வது நாளாக நேற்று ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி சர்ட்களை அவர்கள் அணிந்திருந்தனர். அந்த டி சர்ட்களில், இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.
திடீரென இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை டெல்லி போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய 5 பேரிடம் மட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, ‘‘மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்துக்குள் நுழைய கியூஆர் கோடு அடங்கிய பாஸ் தேவை. காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வாறு பாரத் மண்டபத்துக்குள் நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
பாஜக கண்டனம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களது நடவடிக்கையை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறும்போது, “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தற்போது இந்திய விரோத காங்கிரஸ் கட்சியாக மாறிவிட்டது’’ என்றார்.
பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா கூறும்போது, “எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீட்டில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் டெல்லி ஏஐ மாநாட்டில் போராட்டம் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. தலைமையின் உத்தரவின்படி இந்த சதித் திட்டத்தை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நிறைவேற்றி உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார்.
இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய் பானு சிப் கூறும்போது, “இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரண் அடைந்துள்ளார். இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஜனநாயக நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. டெல்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஜனநாயக முறையிலேயே போராட்டம் நடத்தினர்’’ என்று தெரிவித்தார். மேலாடை இன்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்களை பொதுமக்கள் அடித்து விரட்டினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

More Stories
மே.வங்க எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏஐ மாநாட்டு பிரமுகர்களுக்கு பிரதமர் சிறப்பு விருந்து
கிருஷ்ணகிரி – போச்சாம்பள்ளி பகுதியில் ராகி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!