சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: ஆளுநர் உரை ஆளுங்கட்சிக்கு முழு ஆதரவை தெரிவிக்கும் அறிவிப்பாக மட்டுமே இருந்தது. இதுபோன்ற அறிவிப்புகளை நிறைய பார்த்துவிட்டோம்.
வெறும் அறிவிப்பாக மட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வமான, ஆளுமைமிக்க ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டர்தான் தீர்வாக அமையும். சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்பத்திலும், முடிவிலும் பாடப்பட்டதை நான் வரவேற்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப்பின், `சமூகநீதி சர்வே’ நடத்தப்படும் என்ற ஆளுநர் உரையின் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பாட்டாளிகளின் 46 ஆண்டுக்கால சமூகநீதி கோரிக்கை மற்றும் கனவு நனவாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த காலங்களில் பல முதல்வர்களிடம் வலியுறுத்தியும் சாத்தியமாகாத இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ள முதல்வர் விஜய்க்கு நன்றி.
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்: நிதிப் பகிர்வுக்கான சிறப்புக் குழு, போதை ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம், ஆசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்புகளை சிபிஎம் வரவேற்கிறது.
எனினும், தவெகவின் கொள்கையான `சாதிவாரி இட ஒதுக்கீடு’ என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அதை ஏற்க முடியாது.

சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்: தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை என்பதும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள் குறித்தும் ஆளுநர் உரை அமைதி காத்திருப்பதும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கனிமவளக் கொள்ளை தடுப்பு, ஊழல் ஒழிப்பு, அரசு இயந்திரம் டிஜிட்டல் மயமாக்கல், போதை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குதல் போன்ற அறிவிப்புகள் சிறப்பானவை.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தவெக அரசு தயாரித்த ஆளுநர் உரை, வெறும் `தங்க முலாம் பூசப்பட்ட தகரம்’ ஆகும். இருமொழிக் கொள்கையைத் திணிப்பதும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்த அறிவிப்பு கேலிக்கூத்தானது. மகளிர் திட்டம், சிலிண்டர், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட தவெகவின் கவர்ச்சித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உத்தரவாதமும் இல்லை.
நிதிநிலையைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர். சாதிவாரி சர்வே அறிவிப்பு மட்டுமே இதில் ஆறுதல் தரும் ஒரே விஷயம்.
தவாக தலைவர் வேல்முருகன்: சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த திட்டங்களோ, தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகளோ இல்லை.
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: ஆளுநர் உரை சடங்கு பூர்வமான சம்பிரதாய உரையாக அமைந்திருக்கிறது. அதுவும் முந்தைய திமுக அரசின் கொள்கைகளை அப்படியே வழிமொழிகிற வகையில் பல்வேறு கருத்துகள் இதில் இடம்பெற்றிருந்தன.

More Stories
மேகேதாட்டுக்கு ‘நோ’ சொன்ன தமிழகம்!கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம்அரசின் தனித் தீர்மானம்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
“நீர் மேலாண்மை பற்றி யோசியுங்கள்” – மேகேதாட்டு தீர்மானத்தில் பிரேமலதா பேச்சு
ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து