2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் பிரதான திராவிட கட்சிகளுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும், குறிப்பாக ஆட்சி கட்டிலில் விஜய் அமர்வாரா என்று விரிவாக அலசலாம்.
ஏப்ரல் 23 வாக்குப்பதிவு, மே 4 வாக்கு எண்ணிக்கை. தமிழக மக்கள் மறந்துவிடாதீர்கள். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கிட்டதட்ட 90 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்திலும் புதிய சாதனை படைக்கும் அளவிற்கு வாக்குப்பதிவு செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு கைமாறும் வாக்குகள்
- திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று நினைப்பவர்கள்,
- மாற்று அரசியலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என விரும்புபவர்கள்,
- முதல் முறை வாக்காளர்கள்,
- அரசியல் நிலைப்பாடற்ற பிரிவினர்,
- இளைஞர்கள்,
- பெண்கள்
இவர்கள் தான் மாற்றத்தை நோக்கி சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு விஜய் என்ற நட்சத்திர பிம்பம் மீதான ஈர்ப்பு பிரதானமாக இருக்கிறது. விஜய்யும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் மக்களுடன் நெருங்கி வராதது, பரப்புரை களத்தை திறம்பட கையாளாதது, கள அரசியலில் பெரிய பங்களிப்பை செலுத்தாதது போன்ற விஷயங்கள் பின்னடைவாக உள்ளன.
விஜய் வரலனா என்ன? புது ஐடியாவில் தவெகவினர்!
தவெக பிரிக்கும் வாக்கு வங்கி
இருப்பினும் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி தவெகவிற்கான வாக்கு சதவீதத்தை பெரிதாக உயர்த்தி பிடித்து வருகின்றன. இது விஜய்யின் 1967, 1977ல் நடந்த தேர்தலில் நடந்த ஆட்சி மாற்றத்தை போல் 2026லும் நடத்தி காட்டுவோம் என்ற இலக்கிற்கு வலு சேர்க்கின்றன.
| தேர்தல் ஆண்டு | ஆட்சியை பிடித்த கூட்டணி | வாக்கு சதவீதம் |
| 1967 | திமுக கூட்டணி | 52.59 |
| 1977 | அதிமுக கூட்டணி | 33.50 |
இதற்கிடையில் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார், எவ்வளவு பிரிப்பார், அது தேர்தல் முடிவுகளில் எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. ஒருபுறம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு தவெகவிற்கு வாக்குகள் கிடைக்கும் என்று கூறினாலும், கள யதார்த்தம் அப்படியல்ல என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சென்னை மண்டலத்தில் தவெகவிற்கு இரண்டாம் இடம்
குறிப்பாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு தொகுதிகளில் சமயம் தமிழ் சார்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கருத்துகள் கேட்கப்பட்டன. அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளின் பரப்புரை வியூகங்கள், சமூக ரீதியில் வாக்குகளை சேகரிக்கும் நகர்வுகள் உள்ளிட்டவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் திமுகவின் வார் ரூம் செயல்பாடுகளால் அக்கட்சி முன்னிலையில் இருப்பது தெரிகிறது. இரண்டாம் இடம் தவெகவிற்கும், மூன்றாம் இடம் அதிமுகவிற்கும் கிடைக்கிறது. இந்த சூழலில் NDTV சார்பில் சில தேர்தல் கணக்கீடுகளை விரிவாக அலசியுள்ளனர். அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
| வாய்ப்புகள் | தவெக பெறும் வாக்குகள் | பிரிக்கப்படும் வாக்குகள் | 2026 தேர்தல் முடிவுகள் |
| 1 | 8 சதவீதம் | திமுக 2, அதிமுக 4, இதர கட்சிகள் 2 | திமுக கூட்டணி 173, அதிமுக கூட்டணி 61 |
| 2 | 8 சதவீதம் | திமுக 4, அதிமுக 2, இதர கட்சிகள் 2 | திமுக கூட்டணி 142, அதிமுக கூட்டணி 92 |
| 3 | 10 சதவீதம் | திமுக 2, அதிமுக 6, இதர கட்சிகள் 2 | திமுக கூட்டணி 176, அதிமுக கூட்டணி 58 |
| 4 | 12 சதவீதம் | திமுக 8, அதிமுக 2, இதர கட்சிகள் 2 | திமுக கூட்டணி 107, அதிமுக கூட்டணி 127 |
| 5 | 14 சதவீதம் | திமுக 4, அதிமுக 8, இதர கட்சிகள் 2 | அதிமுக கூட்டணி 51 |
| 6 | 14 சதவீதம் | திமுக 8, அதிமுக 4, இதர கட்சிகள் 2 | திமுக கூட்டணி 119, அதிமுக கூட்டணி 115 |
2026 தேர்தல் பரப்புரையும், வாக்காளர்கள் மனநிலையும்
இந்த முடிவுகளில் எது மே 4ஆம் தேதி அன்று வெளியாகும் வாக்கு எண்ணிக்கை உடன் பொருந்தி போகின்றன என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைய சூழலில் விஜய்யின் பரப்புரை களம் சுவாரஸியம் ஊட்டக்கூடியதாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. திமுகவும், அதிமுகவும் தான் மாறி மாறி அட்டாக் அரசியலை கையிலெடுத்துள்ளன.
தவெகவையும், நாம் தமிழர் கட்சியையும் திராவிட கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுவும் கூட கடைசி நேர தேர்தல் கணக்குகளை மாற்றுவதற்கு உந்து சக்தியாக இருக்கலாம். மற்றபடி திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் இலவசங்களால் நிரம்பியுள்ளன. பெரிய வித்தியாசம் இல்லை. பாரம்பரிய வாக்குகளும், விஜய்யால் இடம்மாறும் வாக்குகளும் 2026 தேர்தலில் முடிவுகளை எழுத காத்திருக்கின்றன.

More Stories
பாலக்கோடு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்
திமுக எம்.பிக்களுடன் முதல்வர் அவசர கூட்டம்..தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்பு -விவரம்!
புதுக்கோட்டை