August 11, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

 திருப்பத்தூர், ஆகஸ்ட். 11

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நோக்கத்தில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

பள்ளி, கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு முதல் மூன்று இடங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Spread the love