October 13, 2026

தெற்கு பைபாஸ் நுழைவுவாசலில் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை புதிய பஸ் நிலையத்தில் `ஒரு வழிப்பாதை’ அமல்

நெல்லை : நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஒரு வழிப்பாதையை போலீசார் அமலுக்கு கொண்டுவந்துள்ளனர். இதையொட்டி தெற்கு பைபாஸ் நுழைவுவாசலில் பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்திய போலீசார் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்தனர்.

குறிப்பாக தென்காசி, திசையன்விளை மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் இதுவரை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள நுழைவு வாசல் வழியாக உள்ளே சென்ற நிலையில் நேற்று முதல் இந்த பஸ்களை திருவனந்தபுரம் சாலைக்கு சென்று அங்குள்ள நுழைவு வாசல் வழியாக உள்ளே செல்ல அறிவுறுத்தினர்.

அத்துடன் இதுதொடர்பான அறிவிப்புகளையும் வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் ஆங்காங்கே அமைத்துள்ளனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளால் பஸ் நிலையத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சென்ற பைக்குகள், ஆட்டோக்களின் போக்குவரத்து முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாளை வேய்ந்தான்குளத்தில் ரூ.பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, ராமேஷ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் நெல்லை, தென்காசி மாவட்ட நகரங்களுக்கு ஏராளமான புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் நெல்லை சந்திப்புக்கு பாளை பஸ் நிலையம் வழியாகவும், தெற்கு பைபாஸ் வழியாகவும் டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இங்கு 6 பிளாட்பாரங்களும், வெளியே டவுன் பஸ் வழித்தடமும் அமைந்துள்ளது.

இந்த பஸ் நிலையத்துக்கு 3 வாசல்கள் அமைந்துள்ளன. இதில் தெற்கு பைபாஸ் சாலை மற்றும் திருவனந்தபுரம் சாலை பகுதியில் உள்ள 2 வாசல்கள் வழியாக பஸ்கள் உள்ளே சென்று, திருவனந்தபுரம் சாலையில் உள்ள மற்றொரு வாசல் வழியாக வெளியே சென்றன. பைக், ஆட்டோ, கார் ஆகியவை 3 வாசல்கள் வழியாக உள்ளேயும், வௌியேயும் சென்று வந்தன. இவ்வாறு வாகனங்கள் அங்குமிங்கும் எதிரெதிரே செல்வதால் அவ்வப்போது வாகன நெருக்கடி ஏற்படுகிறது.

டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. மேலும் வாகன காப்பகம் முன்பு பஸ்கள் உள்ளே வரும் பாதையில் பைக்கை இருபுறமும் வரிசையாக நிறுத்திவிட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள். இதனால் இடநெருக்கடியும் ஏற்படுகிறது. இதுதவிர தற்போது பிளாட்பாரம் பகுதிக்கே பைக்கில் சென்று அங்கு பஸ்கள் திரும்பும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்லும் பழக்கமும் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு பணிக்காக கலெக்டர் ஆனந்த் மோகன், தனது காரில் பஸ் நிலையத்திற்குள் சென்றபோது ஏராளமான வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்றன. இதையடுத்து அவர் பஸ் நிலையத்துக்குள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஒருவழிப்பாதையை போலீசார் தற்போது அமலுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு பேனர் ஒன்றை தயார் செய்து நுழைவு வாசல் பகுதியிலும், பஸ் நிலையத்தின் உள்ளேயும் வைத்தனர். அதாவது பஸ்கள் இனிமேல் ஒரேயொரு வழிப்பாதையில் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். மதுரை, பாபநாசம், தென்காசி, திசையன்விளை மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் இதுவரை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள நுழைவு வாசல் வழியாக உள்ளே சென்றன.

நேற்று முதல் இந்த பஸ்கள் திருவனந்தபுரம் சாலைக்கு சென்று அங்குள்ள நுழைவு வாசல் வழியாக உள்ளே செல்ல அறிவுறுத்தப்பட்டன. இதற்காக அந்த நுழைவு வாயில் பகுதியில் நடுவில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் வழக்கமான வழியில் வெளியே செல்ல வேண்டும்.

நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழித்தட பஸ்கள், நெல்லை சந்திப்பில் இருந்து செல்லும் 1ம் எண் வழித்தட பஸ்கள் தற்போது வந்து செல்லும் அதே பாதையில் செல்ல வேண்டும். அதில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் பொதுமக்களின் வாகனங்கள் இனிமேல் 3 நுழைவு வாசல்கள் வழியாக வந்து, செல்லக்கூடாது. அவர்கள் தெற்கு புறவழிச் சாலையில் உள்ள நுழைவு வாசல் வழியாக மட்டுமே உள்ளே வரவும், வெளியே செல்லவும் வேண்டும்.

மேலும் வெளியூர் செல்லும் நபர்கள் தங்களது பைக்கை அங்குள்ள வாகன காப்பகத்தில் நிறுத்த வேண்டும். பிளாட்பாரம் மற்றும் சாலையோரத்தில் நிறுத்தினால் அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதனால் பஸ் நிலையத்தில் ஆட்டோ, பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக செல்வது நேற்று முதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை பின்பற்ற போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் ஆங்காங்கே அமைத்துள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்றனர்.

பாளை வேய்ந்தான்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் வசதிக்காக பிளாட்பாராங்களில் கழிப்பிடம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விஷமிகள் பஸ் வழித்தடத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த மூளை முடுக்குகளில் சிறுநீர் கழிப்பதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் பொதுஇடங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்க வைக்கும் இதுபோன்ற விஷமிகளையும் கேமராக்கள் மூலம் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

Spread the love