சென்னை: நகை திருட்டு தொடர்பாக, நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறை வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை நீலாங்கரையில் நடிகர் ரவி மோகன் வீடு உள்ளது. அங்கு சிலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்குச் சென்ற தனது தாய், மகன் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் புகார் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து நீலாங்கரை போலீஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டுக்குள் 2 பணிப்பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் நடிகர் ரவி மோகனிடம் விசாரித்த போது, வீட்டில் பணியாற்றி வந்த பெண்கள் நகை திருடியதாக சந்தேகம் ஏற்பட்டதால், அது தொடர்பாக அவர்களிடம் விசாரித்து வந்ததாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புகார் தந்தால் நடவடிக்கை
அப்போது போலீஸார், பொதுமக்கள் யாராக இருந்தாலும் தாங்களாகவே விசாரணை நடத்தி ஒருவரை வீட்டில் தடுத்து வைக்கக்கூடாது என்றும், ஏதேனும் புகார் இருந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
மேலும் நகை திருட்டு தொடர்பாக உரிய புகார் அளித்தால் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்த போலீஸார் வீட்டிலிருந்த பணிப்பெண்கள், அவர்களுடன் இருந்த சிறுவனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More Stories
இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
திமுக தயவால் தான் தவெக ஆட்சி நடக்குது: முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை – அதிர்ந்த சட்டசபை..
அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி கோரிக்கை