ஆஃப் பாயில் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி…

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக மக்கள் கோழி இறைச்சியை முழுமையாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ‘ஹெச் 5. என் 1’ என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, தலைமை செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியனிடன் பறவைக் காய்ச்சல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அமைச்சர் பேசியதாவது:
“பறவைக் காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த தகவல் கிடைத்ததும் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென்று இறந்தால், அதனை பார்ப்பவர்கள் உடனடியாக ஆழமாக குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திடீரென்று உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆஃப் பாயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தமிழகத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த் தொற்று இதுவரை ஏற்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்