சென்னை: “பிரதமர் தந்தை குறித்து விமர்சிக்க காங்கிரஸுக்கு உரிமையில்லை” என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தந்தையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக பாஜக துணைத் தலைவர்கள் வி.பி. துரைசாமி, டால்பின் தரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “பிரதமர் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தரக்குறைவாகப் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் தொடர் வெற்றிகளுக்கு, காங்கிரஸ் கட்சியினரின் இதுபோன்ற விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைகின்றன.
காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களுக்கு, தங்கள் கட்சித் தொண்டர்கள் யார் என்பதுகூடத் தெரியவில்லை. நூற்றாண்டு கால ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை, நீங்கள் மட்டுமல்ல, யாராலும் அழிக்க முடியாது.
எஸ்ஐஆர் மீது இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், தங்களது பதவிகளை ராஜினாமாசெய்துவிட்டு போராட வேண்டியதுதானே? கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்திற்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பதாகப் பாடகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வெளிநாட்டுக் குரல்களை இந்தியாவில் ஒலிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் தந்தை குறித்து தரக்குறைவாகப் பேசுவதற்கு கார்கேவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
பிரதமர் மோடியை எப்போதெல்லாம் விமர்சிக்கிறார்களோ, அப்போதெல்லாம் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஊழல் செய்ததற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவருடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, திமுக பள்ளிக் குழந்தைகளுக்கு அநீதி இழைத்தது.
பல்வேறு தவறுகளைச் செய்துவிட்டு, புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலேயே குறியாக இருந்தது.
யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை இந்தக் கைது உணர்த்துகிறது. தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தில் நிரபராதிகள் என நிரூபித்து வெளியே வரட்டும்” என்றார்.

More Stories
கோவை பள்ளி மாணவர் அகிலன் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிதி, அரசு வேலை
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு: நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.