July 29, 2026

பூஜ்ஜிய நிலையை அடைந்த பெரியாறு அணை நீர்வரத்து: வைகை அணைக்கு நீர் திறப்பதில் சிக்கல்?

குமுளி: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து நேற்று பூஜ்ஜிய நிலையை அடைந்தது. இதனால் நீர்மட்டம் வெகு வாகக் குறைந்ததுடன் வைகை அணைக்காக தண்ணீர் திறப் பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு பொய்த்ததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கவில்லை.

எனவே 14 ஆயிரத்து 707 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இருப்பினும் குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது பெய்த லேசான சாரலால் நீர்வரத்தும் ஓரளவுக்கு இருந்தது.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி விநாடிக்கு 150 கன அடியாகக் குறைந்த நீர்மட்டம் அடுத்தடுத்து 80.5, 80 கன அடி என்று குறைந்து கொண்டே சென்று நீர்வரத்து நேற்று பூஜ்ஜிய நிலையை அடைந்தது.

பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் தற்போது ஒரே நம்பிக்கை நீராதாரமாக பெரியாறு அணையே உள்ளது. குடிநீருக்காக அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி மாவட்டத்தின் பல உள்ளாட்சிகளைக் கடந்து வைகை அணையை வந்தடைகிறது.

இதனால் வழியில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் வைகை அணையின் நீர்மட்டமும் 20 அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து நேற்று 33.83 அடியை எட்டியது.

இந்நிலையில் மழை இல்லாததால் கடந்த வாரம் 113 அடியில் இருந்த பெரியாறு அணையில் நேற்று 112 அடியாக குறைந்தது. நீர்மட்டம் தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளதால் வைகை அணைக்கான நீர் திறப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் படகு இயக்குவதில் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளும் உருவாகி உள்ளன.

Spread the love