புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகையில் 50% உள்ள பெண்கள், முடிவெடுக்கும் இடங்களில் பங்கேற்பது காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பெண்களுக்கான உரிமையை எதிர்த்தவர்களை அவர்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் நோக்கில், அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒரு நாட்டின் வாழ்வில் சில முக்கியமான தருணங்கள் அமையும். அத்தகைய தருணங்களில், சமூகத்தின் மனநிலையும், தலைமைத்துவத்தின் திறமையும் இணைந்து ஒரு வலுவான மரபை உருவாக்குகின்றன. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் இந்த தருணம் அத்தகைய ஒரு முக்கியமான தருணமே.
பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த யோசனை 25-30 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் கருவாகி, அதற்கான தேவை உணரப்பட்டபோதே நாம் இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்று நாம் ஒரு முதிர்ந்த நிலைக்கு அதை கொண்டு வந்திருப்போம். உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்தவர்கள், நாடாளுமன்றத்தில் அளிக்க முன்வரவில்லை. அதற்குக் காரணம், தங்களுக்கு போட்டி அதிகமாகிவிடக் கூடாது என்பதே. நமது நாடு ‘ஜனநாயகத்தின் தாய்’ ஆகும். நமது ஜனநாயகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. அந்த வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் நற்பேறு இந்த அவையில் உள்ள நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் பெண்கள் பாதியளவு இருக்கிறார்கள். தேசத்தைக் கட்டமைக்கும் (நாடாளுமன்ற) செயல்முறையில் அவர்கள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், இந்த முக்கியமான வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது. இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்கப் போகிறோம். நமது ஆட்சி நிர்வாக அமைப்பில் உணர்வுபூர்வமான அணுகுமுறையை ஊடுருவச் செய்ய, நாம் ஒரு அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்ளப் போகிறோம். இது நாட்டின் அரசியலை வடிவமைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத் திசையையும் நிலையையும் தீர்மானிப்பதாகவும் அமையும்.
21-ஆம் நூற்றாண்டில், இந்தியா ஒரு புதிய தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய உலகில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்பது வெறும் ரயில்வே வசதிகளை மட்டும் குறிப்பதல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். சாலைகள், உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மற்றும் வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் மட்டுமே ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா என்று கருதும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் நாங்கள் அல்ல. ‘அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற மந்திரத்தை உண்மையாகவே பிரதிபலிக்கும் ஒரு ‘வளர்ச்சியடைந்த இந்தியாவையே’ நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள், கொள்கை உருவாக்கத்தில் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
நாம் ஏற்கெனவே இதில் காலதாமதம் செய்துவிட்டோம். அதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இந்த எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான இந்தச் செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டன. ஒரே ஒரு கட்சியைத் தவிர, நாங்கள் சந்தித்த மற்ற அனைவரும் கொள்கை ரீதியாக இதற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
அரசியல் ரீதியில் மட்டுமே சிந்திப்பவர்களுக்கு நான் ஒரு அறிவுரையை வழங்க விரும்புகிறேன். நம் நாட்டில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கியதிலிருந்து, அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், பெண்களுக்கான இந்த உரிமையை எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு நாட்டின் ஜனநாயகத்துக்குச் சாதகமாக அமையும். நாட்டின் கூட்டு முடிவெடுக்கும் செயல்முறைக்கு வலுசேர்க்கும். மேலும், இதற்கான பெருமை நம் அனைவருக்கும் உரித்தானதாக இருக்கும். இதற்கான முழு உரிமையும் ஆளுங்கட்சிக்கோ அல்லது மோடிக்கோ மட்டும் உரியதல்ல. அதேபோல, இங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களுக்கு மட்டும் உரியதல்ல. இதற்கு ஒரு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, ‘மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நிற்கும்’ என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

More Stories
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் .. “இது காலத்தின் கட்டாயம்” பிரதமர் மோடி பேச்சு!
அனைத்து மாநிலங்களிலும் 50% இடங்கள் உயர்வு: தொகுதி மறுவரையறை பிரச்சினையில் மத்திய அமைச்சர் உறுதி
தமிழகத்திற்கு இன்று பிரதமர் மோடி வருகை – நாகர்கோவிலில் ரோட் ஷோ- உற்சாகத்தில் பாஜக!