
புதுடெல்லி வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி செல்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். அமளிக்கு நடுவே பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். அந்த இலக்கை நோக்கி நமது நாடு வேகமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சியின் பலன்களை பெற்றுள்ளனர். நமது நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் உரையில் நாட்டின் வளமான எதிர்காலம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
21-ம் நூற்றாண்டின் கால் பகுதி நிறைவடைந்து, 2-வது கால் பகுதியில் அடியெடுத்து வைத்துள்ளோம். சுதந்திர போராட்ட காலத்தைப் போன்று இந்த காலமும் மிகவும் முக்கியமானது. நாம் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும். ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமன்றி 9 பெரிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பின்னடைவு: நாடு சுதந்திரம் அடைந்தபோது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் இருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடு பின்தங்கி 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியா மீண்டும் வேகமாக முன்னேற தொடங்கியது. தற்போது 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற லட்சியத்தை நோக்கி பயணம் செய்கிறோம். அறிவியல், விண்வெளி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பல்வேறு சவால்களை சந்தித்தன. இந்த பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு புதிய ஒழுங்கு பிறந்தது. தற்போது அதேபோன்ற சூழல் உருவாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுடன் கைகோத்து வருகின்றன. உலகின் நன்மைக்காக நட்பு நாடுகளுடன் இணைந்து தோளோடு தோள் நின்று இந்தியா பணியாற்றி வருகிறது. சர்வதேச அரங்கில் குளோபல் சவுத் கூட்டமைப்பின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த கூட்டமைப்பின் குரலாக இந்தியா செயல்படுகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பெரும்பாலான நாடுகள் தயங்கின. இப்போது நிலைமை முழுமையாக மாறியிருக்கிறது. அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த கட்சியின் தலைவர்களுக்கு தொலை நோக்குப் பார்வை, துணிச்சலாக செயல்படும் திறன் இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் கடந்த கால தவறுகள் திருத்தப்பட்டன. ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. குறிப்பாக குறு, சிறு தொழில் துறையின் வளர்ச்சிக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறி உள்ளோம்.
தற்போது அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும். பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்களால் இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கித் துறை முதுகெலும்பாக விளங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முன்பு காங்கிரஸ் தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. சாமானிய மக்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் காங்கிரஸ் தலைவர்களின் தனிப்பட்ட சொத்தாக கருதப்பட்டன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் குறு, சிறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.4 லட்சம் கோடி விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஊழலில் திளைத்த கட்சிகள்: காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் நீண்ட காலம் ஆட்சி நடத்தி உள்ளன.
ஆனால் இந்த கட்சிகள் தங்களது ஆட்சிக் காலங்களில் ஊழல்களில் திளைத்திருந்தன. அவர்களின் ஊழல்களை மக்கள் நன்கு அறிவார்கள். பாஜக ஆட்சிக் காலத்தில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மக்களை பிரச்சினையாக கருதினார் நேரு: பிரதமர் மோடி பேசும்போது, “நேரு ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 35 கோடியாக இருந்தது. இந்த 35 கோடி மக்களும் 35 கோடி பிரச்சினைகள் என்று நேரு குறிப்பிட்டார். இதேபோல இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 57 கோடியாக இருந்தது. அவரும் நேருவை போன்றே கருத்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. இந்த 140 கோடி இந்தியரையும் வரப்பிரசாதமாக கருதுகிறோம். நாட்டின் பாது காவலர்களாக கருதுகிறோம்.
உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியாவில் தீர்வு காணப்படுகிறது. பல்வேறு நாடுகளில் மூத்த குடி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இந்தியா இளமையான, துடிப்பான நாடாக விளங்குகிறது. ரவ்னீத் சிங் பிட்டு குறித்து ராகுல் காந்தி மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதன்மூலம் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் அவர் அவமதித்து உள்ளார். அவர்கள் மீது வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளார். பழங்குடியினத்தை சேர்ந்த பெண் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகிக்கிறார். ஆனால் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கருத்துகளை தெரிவித்தது” என்றார்.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு