கல்வி, ஊட்டச்சத்தில் புரட்சியை ஏற்படுத்திய காமராஜரின் மதிய உணவுத் திட்டம் எனும் பேரியக்கத்துக்கு இது 70ஆம் ஆண்டு. சொல்லப்போனால், நூற்றாண்டு கண்ட திட்டம் இது.
ஏழைப் பட்டியலினக் குழந்தைகள் பள்ளிகளை நோக்கிச் செல்வதற்குப் பசி மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பதால், அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாட்டின் முதல் பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.ராஜா சட்டப்பேரவை கவுன்சிலில் 1922இல் வலியுறுத்தினார்.
நீதிக்கு நிதி தடையா?
நீதிக்கட்சி ஆட்சியில் முதல் முதலாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை அடுத்து 1924இல் சென்னையில் சிங்காரவேலரும் எல்.சி. குருசாமியும் இணைந்து தங்களது வார்டுகளுக்கு உள்பட்ட பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.
இப்படியாகச் சில நூறு குழந்தைகளுக்குக் கல்விக் கதவைத் திறந்து வைத்த திட்டத்தை, சமூகத்தின் கீழ் அடுக்கில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்விக் கனவு நிறைவேறும்படி மாற்றியதில் காமராஜரின் பங்கு மகத்தானது.
அரசுத் திட்டமாக மட்டுமல்லாமல் மக்கள் இயக்கமாக மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் மாற்றினார். ஏனெனில் நிதிச்சுமையைக் காரணம் காட்டி திட்டத்தை நிறுத்த அரசு அதிகாரிகள் முதற்கொண்டு பல்வேறு தரப்பினர் முயன்றனர்.
‘இதற்கெல்லாம் அரசிடம் போதிய நிதி இல்லை, இந்தத் திட்டம் அரசு திவாலாக வழிவகுக்கும்’ என்று நிதி அமைச்சகமும், உயர் அதிகாரிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். திட்டத்துக்கான கூடுதல் நிதியுதவியை வழங்க அன்றைய மத்திய அரசும் மறுத்துவிட்டது.
ஆனால், நிதி நெருக்கடியைக் கண்டு காமராஜர் அஞ்சவில்லை. 1955இல் நடைபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டில், “நிதி இல்லை என்று கூறி குழந்தைகளின் பசியை அலட்சியப்படுத்த முடியாது.
அரசிடம் பணம் இல்லை என்றால், மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நான் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்தாவது என் நாட்டு ஏழைக் குழந்தைகளுக்கு உணவிடுவேன்” என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டார்.
ஊர் மக்கள் முதல் அமெரிக்காவரை
தனது துணிச்சலான முடிவை நிறைவேற்ற சிறந்த தீர்வை காமராஜர் முன்மொழிந்தார். ஒரு வேளை உணவுக்கு அன்றைய தேதியில் 6 காசுகளை அரசு வழங்கியது. மீதமுள்ள தொகையை அந்தந்த ஊர்ப் பொதுமக்கள், நிலச்சுவான்தாரர்கள், வள்ளல்கள் நன்கொடையாக வழங்கும் விதியை உருவாக்கினார்.
மதிய உணவைச் சமைத்து மாணவர்களுக்குப் பரிமாற, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மக்களின் பங்களிப்போடு ஏற்படுத்தப்பட்டன. இது குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டு தலையும் மக்களிடையே ஏற்படுத்த, ‘பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை’ நடத்தினார்.
அடுத்தகட்ட நிதிப் பற்றாக் குறையைச் சமாளிக்க அமெரிக்காவின் ‘கேர்’ (CARE) தொண்டு நிறுவனத்திடமிருந்து பால் பவுடர், கோதுமை போன்ற உணவுப் பொருள்களைப் பெற்று மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.
இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்தது. திட்டம் தொடங்கி சில ஆண்டுகளிலேயே மாநிலம் முழுவதும் 29,017 பள்ளிகளில் பயின்ற லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
காமராஜர் உருவாக்கிய இந்த மதிய உணவுத் திட்டமே, இன்று இந்தியா முழுவதும் ‘தேசிய மதிய உணவுத் திட்டமாக’ உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் தனி அடையாளமாக இத்திட்டம் உருவெடுக்கவே, அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் இதில் வளர்ச்சிகளை ஏற்படுத்தினர். 1982இல் எம்ஜிஆர் ‘சத்துணவுத் திட்டம்’ என்கிற தனித் துறையை நிறுவினார், 1989இல் கருணாநிதி இத்திட்டத்தில் முட்டையைச் சேர்த்தார், ஜெயலலிதா வெவ்வேறு விதமாகச் சமைக்கப்பட்ட முட்டை, கலவை சோறு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார், மு.க.ஸ்டாலின் காலை உணவு எனும் புதிய மைல் கல்லை நாட்டினார்

More Stories
சாட்ஜிபிடி, ஜெமினி, நோட்புக் எல்.எம். போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயலி உருவாக்க பயிற்சி இன்று தொடக்கம்
டெட்: தகுதியானதா ‘தகுதித் தேர்வு’?
சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்