September 15, 2026

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தினை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ – மாணவிகள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தை சார்ந்த தகுதியான மாணவ – மாணவிகள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல், புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.in விண்ணப்பிக்கலாம். இந்த, திட்டத்தில் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சம 9 மற்றும் 10ம் வகுப்பு பயில்பவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிற்சி வகுப்புகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை உதவித் தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30 சதவீத மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ – மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் அல்லது சீர் மரபினர் பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வருமான வரம்பு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2005-26ம் ஆண்டின் தேர்ச்சி பெற்று தேசிய உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில், கடந்த நிதியாண்டின் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ – மாணவிகள் நடப்பாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்து புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை படிவத்தினை இணையதளத்தில் பூர்த்தி செய்து இணைப்பில் பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அவர்களது பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரி பார்ப்பதற்கான புதுப்பித்தல் வரும் அக்டோபர் 15ம் தேதி கடைசி நாளாகும்.

புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்பு வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ – மாணவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணையதளத்தினை அறிந்து கொள்ளலாம். எனவே, தகுதியான மாணவ – மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love