September 4, 2026

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் உச்சரிக்கப்படும்: உயர்நீதிமன்ற கிளை

மதுரை, செப். 4: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் உச்சரிக்கப்படும் என கோயில் தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளேன். ஆனால், சில கோயில்களில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மொழி மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு வரும் செப். 17ல் நடைபெறுகிறது. இதில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார். இதே கோரிக்கையுடன் கோவையை சேர்ந்த சுரேஷ் பாபு என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். மீனாட்சி அம்மன் கோயில் தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘மீனாட்சி அம்மன் கோயில் நடைமுறைப்படி தமிழ் மந்திரங்களும், பாராயணமும் ஓதப்படும். வீரவசந்தராயர் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் மந்திரங்களும், பாராயணமும் ஓதப்படும். மீனாட்சி அம்மன் கோயிலின் நடைமுறை பின்பற்றப்படும்’’ என்றார்.

நீதிபதி சி.சரவணன் உத்தரவில் மேலும் கூறுகையில், “கோயிலின் கருவறை, யாகசாலை மற்றும் கோபுர கலச நன்னீராட்டு உள்ளிட்ட குடமுழுக்கின் அனைத்து முதன்மை நிகழ்வுகளிலும், சமஸ்கிருத வேதங்கள் மற்றும் ஆகம மந்திரங்கள் ஓதப்படும் அதே இடத்தில், அதற்கு இணையாக தமிழ் திருமுறை ஓதுவார்களும், தகுதிவாய்ந்த ஸ்தானீக பட்டர்களும் தமிழ் திருமுறைகள், தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் சைவ மந்திரங்களை ஓத முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் நடைபெறும் குடமுழுக்குகளில் தமிழ் திருமுறைகளுக்கு உரிய சம முக்கியத்துவமும் முதன்மையும் அளிக்கப்ப டுவதை உறுதி செய்ய வேண்டும். இறைவனுக்கு தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் புரியும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழால் இறைவனைப் போற்றி வளர்த்த பக்தி இலக்கியங்களே இதற்குச் சான்று. கோயில்களில் சமஸ்கிருதத்திற்கு இணையான இடமும் மரியாதையும் தமிழ் மொழிக்கும், தமிழ் திருமுறைகளுக்கும் வழங்கப் பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

இதையடுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாட்டில் ஆகம கோயில்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்கள் இடம்பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என 2021ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதுதான் நீதிமன்றத்தின் பணி. சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. அரசு தான் சட்டத்தை உருவாக்க முடியும். எனவே, மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love