April 28, 2026

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டுஇன்று ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து

மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கல்யாண மாப்பிள்ளை விருந்து தொடங்கியது. மாநகர் மதுரையில் சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாள் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெறுகிறது.
அதற்கான முதல் நாள் மாப்பிள்ளை விருந்து  பழமுதிர்ச் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் நேற்று மாலை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு பூஜைகள் செய்து ஸ்தாபகர் தெய்வத்திரு செவந்திராஜன் மற்றும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகள் அயராது இதனை முன்னெடுத்துச் சென்ற சாமுண்டி பி என். விவேகானந்தன் அவர்கள் ஆசியுடன் 28 ஆம் ஆண்டு சேவை தொடங்கியது.


சேதுபதி பள்ளிச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் எஸ். பார்த்தசாரதி, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம், காவல்துறை உயர் அதிகாரிகள், கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.சீனிவாசன், பாபு, மாமன்ற உறுப்பினர் விஜயா குரு, மேனாள் பிஆர் ஓ  ஆர். பாஸ்கரன், தாம்பிராஸ் இல. அமுதன், பள்ளி முதல்வர் கே,எஸ். நாராயணன், மேனாள் டிஎஸ்பி. கணேசன், தியாக தீபம் அ. பாலு, சீ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எப் எஸ் எஸ் ஐ அதிகாரி, சமூக சேவகர் காமாட்சி சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
நாற்பதாயிரம் பேருக்கு நேற்று இரவு விருந்தில் கேசரி,  போண்டா, பொங்கல் விருந்தினை அதன் தலைவர் பி. தண்டீஸ்வரன், செயலாளர் எஸ் ஆர் வெங்கடேசன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கே. கார்த்திகேயன் என்ற ராஜா, பொருளாளர் பிஎன். வி.ஹரி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
நேற்று இரவு பெரும் திரளான மக்கள் வெள்ளத்தில் இந்த விருந்து மிக கட்டுப்பாடாக, மிக நேர்த்தியாக நமது முன்னோர்கள் அறப்பணிகளால் நடந்து வருகிறது. இதனை உலகை ஆளும் நமது அன்னை மீனாட்சி நடத்துகின்றார்.
சேவை மனப்பான்மை கொண்ட பல நூறு அன்பர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் வெட்டுவது, சமையல் பணியாற்றுவது, பரிமாறும் பணி, சுத்தம் செய்யும் பணி, கூட்டத்தை மிக நேர்த்தியாக ஒழுங்கு படுத்தும் பணி என ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணிக்கு தொண்டாகச் செய்து வருவது வணங்குதற்குரியது.
இன்று காலை முதல் மாலை வரை திருக்கல்யாண விருந்து ஒன்றரை லட்சம் பேருக்கு தயாராகி வருகிறது. இந்த திருப்பணி விருந்துக்கு மதுரை மக்கள் தாமாக முன்வந்து பேருதவி புரிகின்றனர்.
மேலும் இங்கு சமையல் உட்பட அனைத்துப் பணிகளும் துறை சார்ந்த பெருமக்களின் உழைப்பும் அன்னைக்கு கடமையாற்றும் உணர்வு மட்டுமே. யாரும் ஊதியம் பெறுவதில்லை. இது மாநகர் மதுரையில் நடைபெறும் மகத்தான திருப்பணி. ஒப்பீடு இல்லாத அறப்பணி வாழியவே.

Spread the love