June 22, 2026

முதல்வர் விஜய்க்கு இன்று 52-வது பிறந்தநாள்: தவெக சார்பில் கொண்டாட ஏற்பாடு

சென்னை: முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் தவெக சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் ஏற்பாட்டில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், விஷேச பூஜைகள் இன்று நடைபெறுகின்றன. இன்று மாலை தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் காலை 7 மணிக்கு நடக்கும் சிறப்பு பூஜையில் அமைச்சர் என்.ஆனந்த் கலந்துகொண்டு கோதானம் வழங்குகிறார். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேவாலயங்கள் மற்றும் தர்காக்களிலும் முதல்வரின் நீண்ட ஆயுளுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. ரத்ததானம் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். தனது பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love