July 15, 2026

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை” – குதிரை பேரம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

சென்னை: “திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப் போகிறார்கள் என நினைக்கிறேன்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப் போகிறார்கள் என நினைக்கிறேன். அதிமுக தென் மாவட்டங்களில் மாவட்ட அளவில் மட்டுமே உள்ளது; நிர்வாகிகள் வேறு எங்கும் இல்லை. அதிமுகவில் பொதுச் செயலாளர் என ஒருவர் இருப்பதாகவே அக்கட்சி தொண்டர்களுக்கு நினைவு இல்லை.

குதிரை பேரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள்தான் சிக்கியுள்ளனர்.

எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால்தான் அது குதிரை பேரம். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகல் செய்துவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல. இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. பதவி விலகல் செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?

குதிரை பேரம் சம்பந்தமாக, ஆர்.எஸ்.பாரதி டைம் பாஸுக்கு சிபிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்படும். இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

Spread the love