ஜேஎஸ்டபிள்யூ குழுமம், ஆம்ப்ஸ்டார் என்ற புதிய பிராண்டில் வணிக ரீதியிலான மின்சாரப் பேருந்துகள், லாரிகளை அறிமுகம் செய்துள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம், மின்சார வாகனத் தயாரிப்பு துறையில் தீவிரம் காட்டி வருகிறது. வணிகப் போக்குவரத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், தற்போது ‘ஆம்ப்ஸ்டார்’ என்ற புதிய பிராண்டில் மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளை அறிமுகம் செய்துள்ளது. ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் ஒரு பிரிவான ஜேஎஸ்டபிள்யூ கிரீன்டெக் நிறுவனம் சார்பில் வடிவமைத்து, உற்பத்தி செய்யப்படும் இந்த மி்ன்சாரப் பேருந்துகள், லாரிகள் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
வாடிக்கையாளரின் பயன்பாட்டுத் தேவைகள் முழுவதையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய பிராண்ட் வர்த்தக வாகன உற்பத்தியில் ரூ.2,500 கோடியை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் முதலீடு செய்துள்ளது. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின்சார வாகன உற்பத்தித் தொழிற்சாலையில் ஆம்ப்ஸ்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக இங்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. வரும் காலத்தில் ஆலையை விரிவுபடுத்தி, உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அறிமுக விழாவில் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் பேசும்போது, “நமது மக்களையும் உடமைகளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் நகர்த்துவதற்கு பதிலாக, இந்தியாவிலேயே உற்பத்தியாகும் மின்சாரத்தில் இயங்க வைப்பதே எங்கள் நோக்கம். உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதைச் சார்ந்திருப்பதை கட்டுப்படுத்த முடியும்.
இந்தியா பயணிக்கும் வழியையே மாற்றுவதற்கான ஓர் ஊக்கியாக ஆம்ப்ஸ்டார் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் மின்சாரப் பேருந்து மற்றும் லாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தைரியமான முடிவை எடுக்க வேண்டுமென்றால், அதற்கான பொருளாதாரச் சாதகங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இன்று தொடங்கும் ஆம்ப்ஸ்டார் பயணம் இந்தியாவின் வணிக தடத்தை மாற்றியமைக்கும்” என்றார்.

More Stories
தொடர் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன?
அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்
முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆனார் கவுதம் அதானி