சென்னை: மலேசிய அரசின் ‘விசிட் மலேசியா 2026’ சிறப்புச் சுற்றுலாத் திட்டத்தின் காலக்கெடு 2027-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், மலேசிய சுற்றுலாத் துறை பல்வேறு விளம்பரப் பணிகளை முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்து மலேசிய சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் அமிருள் ரிசால் அப்துல் ரஹீம் கூறியதாவது: மலேசிய சுற்றுலாத் துறையின் முக்கிய அங்கமாக இந்தியா உள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, மலேசியாவின் முதல் 5 முக்கியச் சுற்றுலாச் சந்தைகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
கடந்த 2023 டிசம்பர் முதல் இந்தியர்களுக்கு விசா இன்றி பயணிக்கும் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025-ல் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச பயணக் கொள்கைகளில் மாற்றங்கள் நிலவினாலும், இந்தியச் சந்தையுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தவும், இருநாட்டு சுற்றுலா துறை கூட்டாண்மையை விரிவு படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ‘சேல்ஸ் மிஷன் சீரிஸ் – 2’ என்ற வர்த்தக மேம்பாட்டு நிகழ்வு சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் 20-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் மலேசிய உணவகங்கள், சுற்றுலா அமைப்புகள் உட்பட 47 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
மேற்கு வங்கத்தில் தவெக கிளை துவக்கம்: அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டம்
புதுக்கோட்டை: பூட்டிய வீட்டில் சுதாரித்த 3 சிறுவர்களால் தடுக்கப்பட்ட பெரும் தீ விபத்து
“ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர், அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” – டி.ஆர்.பாலு மனு