சென்னை: நவராத்திரி விழாவின் நிறைவாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர். கல்வி, கலைகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு விஜயதசமி உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
இதையொட்டி, சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில், மகாலிங்கபுரம் ஐயப்பன் – குருவாயூரப்பன் கோயில், நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில், அம்பத்தூர் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுடன் பெற்றோர் கோயில்களுக்கு வருகை தந்தனர்.
அர்ச்சகர்கள் வழிகாட்டுதலின்படி, குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் ஹரி கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தைப் பெற்றோர் எழுதினர்.
பின்னர், குழந்தைகளின் கைகளைப் பிடித்து, நெல் மற்றும் அரிசியில் ‘அ’ என எழுத வைத்து, அவர் களின் கல்விப் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகரும் இயக்குநருமான ஒய்.ஜி.மகேந்திரன், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் செங்கோட்டுவேலு, ஜெயராஜ், ‘தாய் மண்ணே’ புகழ் ரவி முருகையா மற்றும் கோயில் துணை ஆணையர் சித்ரா தேவி பங்கேற்றனர்.
குழந்தைகள் மற்றும் பக்தர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பில் இலவ சமாகப் பால் வழங்கப்பட்டது.
முதன்முதலாக எழுத்துகளை எழுதும் அனுபவம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. சில குழந்தைகள் தாங்களாகவே அரிசியில் எழுதியும், கிறுக்கியும் மகிழ்ந்தது பக்தர்களை கவர்ந்தது.

More Stories
மஹாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த மக்கள்
நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் புறப்பாடு