
புதுடெல்லி: கடந்தாண்டு டிசம்பரில் விமான பயணிகளிடம் இருந்து 29,212 புகார்கள் வந்தன. இவற்றில் 7.5 சதவீதம் கட்டணத்தை திரும்ப பெறுவது (ரீபண்ட்) தொடர்பானவை. இதையடுத்து ரீபண்ட் விதிமுறைகளில் டிஜிசிஏ மாற்றம் செய்துள்ளது.
இது குறித்து டிஜிசிஏ கூறியிருப்பதாவது: விமான நிறுவன இணையதளம் மூலம் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் பயணியின் பெயரில் திருத்தம் இருந்து, டிக்கெட் வாங்கிய 24 மணி நேரத்துக்குள் திருத்தம் செய்யப்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. டிராவல் நிறுவன ஏஜென்ட் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் வாங்கப்பட்டாலும், பணத்தைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு விமான நிறுவனங்களுக்கே உள்ளது. 14 நாட்களுக்குள் ரீபண்ட் செலுத்தப்பட வேண்டும்.
மருத்துவ அவசரம் காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகும் பயணிகள் டிக்கெட் ரத்து செய்தால், கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். விமான டிக்கெட் வாங்கிய பின் பயணிகள் , கூடுதல் கட்டணமின்றி திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்ய 48 மணி நேரம் அவகாசம் வழங்கும்படி விமான நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதி, உள்நாட்டு விமான போக்குவரத்தில், பயண தேதி ஒரு வாரத்துக்கு குறைவாக இருந்தால் கிடைக்காது. வெளிநாட்டுப் பயணம் என்றால் பயண தேதி 15 நாட்களுக்கு குறைவாக இருந்தால் இந்த வசதியை பெற முடியாது. இவ்வாறு டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

More Stories
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளோம்: பஹல்காம் நினைவு நாளில் ஒமர் அப்துல்லா அஞ்சலி
திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 13 பேர் உயிரிழப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 2% அகவிலைப்படி உயர்வு- அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!