February 7, 2026

வீட்டின் உரிமையாளர் போல் நடித்து மூதாட்டிக்கு குத்தகைக்கு விட்டு ரூ.18 லட்சம் மோசடி

வீட்டின் உரிமையாளர் போல் நடித்து மூதாட்டிக்கு குத்தகைக்கு விட்டு ரூ.18 லட்சம் மோசடி

சென்னை: வீட்டின் உரிமையாளர் போல் நடித்து, மூதாட்டிக்கு வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புரசைவாக்கம், பண்டாரம் தெருவில் வசித்து வரும் மூதாட்டி கவுசர் ஜஹான்(65).

இவர், கடந்த ஆண்டு குத்தகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு தெரிந்த தரகர் ஒருவர், சேத்துப்பட்டில் வசிக்கும் முகமது ரிஸ்வான்(52) என்பவரிடம் அழைத்துச் சென்று, அவருக்கு சொந்தமாக உள்ள புரசைவாக்கம், பண்டாரம் தெருவில் உள்ள ஒரு வீட்டை காண்பித்து குத்தகைபணம் ரூ.18 லட்சம் என நிர்ணயம்செய்து, ஒப்பந்தம் செய்தனர்.

அதன்படி முகமது ரிஸ்வானிடம் பணம் கொடுத்து, வீட்டில் கவுசர் ஜஹான் குடியேறினார். சில மாதங்களுக்குப் பின், அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் முஸாமில் அன்சார் என்பது அவருக்குத் தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த கவுசர் ஜஹான், இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், முகமது ரிஸ்வான், தரகர் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து, வீட்டு உரிமையாளர் போல நடித்து குத்தகை பணமாக ரூ.18 லட்சம் பெற்று, கவுசர் ஜஹானை ஏமாற்றியதும், இதுபோல பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளைத் தேடி வரு கின்றனர்.

Spread the love