ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் பாலாப்பூர் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த மகா லட்டு பிரசாதம் இந்த ஆண்டு ரூ.39 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.
கடந்த 14-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து 12வது நாளான நேற்று ஹைதராபாத்தில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மிகவும் பாதுகாப்பாக ஊர்வலமாக கொண்டு சென்று பல நீர் நிலைகளில் கரைத்தனர். ஹைதராபாத்தில் 69 அடியில் அமைந்த மகா கணபதியின் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விநாயகரை நேற்று மதியம் 2.15 மணிக்கு நெக்லஸ் ரோடு பகுதியில் உள்ள உசேன் சாகரில் கரைத்தனர். அடுத்தபடியாக பாலாப்பூர் விநாயகர் உட்பட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று 36 நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. காலை 7 மணி முதல் நேற்று நள்ளிரவு வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கிரேன்களின் உதவியால் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத் பாலாப்பூர் விநாயகரை பக்தர்கள் பிரத்யேகமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த 45 ஆண்டுகளாக பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு மாபெரும் பந்தலிட்டு விநாயகர் சிலை அமைக்கப்படுகிறது. அப்போது விநாயகரின் கையில் லட்டு பிரசாதம் வைக்கப்படுகிறது. 9 அல்லது 11வது நாள் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு முன்னதாக அந்த லட்டு ஏலம் போடப்படுகிறது.
முதன் முதலாக இந்த லட்டு பிரசாதம் ரூ.450க்கு ஏலம் போனது. இந்த ஆண்டு, பாதாம், பிஸ்தா, முந்திரி என சிறப்பாக தயாரிக்கப்பட்ட லட்டு நேற்று ரூ. 39 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த முறைலட்டு பிரசாதத்தை சாஹிப் நகரை சேர்ந்த பிரணீத் ரெட்டி என்பவர் ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு இந்த லட்டு ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

More Stories
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு
காஷ்மீரில் இல்லாத ஓட்டலுக்கு முன்பதிவு செய்து ஏமாற்றம்: கடுங்குளிரில் காரிலேயே தங்கிய குடும்பம்
“காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்திய, சீன ஒத்துழைப்பு அவசியம்” – ஐநாவில் நேபாள பிரதமர் உரை