August 19, 2026

ஹோர்மூஸ் நீரிணையை திறக்கும் முயற்சிக்கு தடையாக இருந்தால் ஓமன் மீது குண்டு வீசுவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஹோர்மூஸ் நீரிணையை திறக்கும் முயற்சிக்கு தடையாக இருந்தால் ஓமன் மீது குண்டு வீசுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரான் உடனான போரில் அமெரிக்க ஆயுதங்களில் வேர்க்கடலை அளவே பயன்படுத்தி உள்ளோம். மோதலை முடிவுக்கு கொண்டு வர எனக்கு எந்த அவகாசமும் இல்லை” எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து அமெரிக்காவும் ஓமனும் தெஹ்ரானுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டுள்ளது.

ஓமான் உடனான தொலைபேசி நேர்காணலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, ஓமனுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் இருப்பதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாக உள்ளதால் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நேற்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் இல்லை என்று பதிலளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் பெரிதும் முடக்கியுள்ளதுடன், ஜலசந்தியின் தெற்கே எல்லைக் கொண்டுள்ள ஓமன் இந்த மோதலில் தான் ஒரு நடுநிலை நாடாக இருப்பதாகக் கூறினாலும், ஈரானின் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள ஓமன் தற்போது நீர்வழியைத் திறக்க தெஹ்ரானுடன் பேசி முக்கியப் பங்கை வகித்து வருகிறது.

இதற்கிடையில், வாஷிங்டன் தனது சொந்த முயற்சியில் ஜலசந்தியைத் திறக்க முயன்று வருவதுடன், “ஓமன் குறுக்கே நின்றால், நாங்கள் அவர்களைக் கடுமையாகக் குண்டுவீசித் தாக்குவோம். ஈரான் உடனான போரில் அமெரிக்க ஆயுதங்களில் வேர்க்கடலை அளவே பயன்படுத்தி உள்ளோம். மோதலை முடிவுக்கு கொண்டு வர எனக்கு எந்த அவகாசமும் இல்லை” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Spread the love