சென்னை: அரசுக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டுமென அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தற்போதைய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் விஜய் தலைமையில் துறைகள் ரீதியான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கியது.
இதுவரை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 3-வது நாளாக உயர்கல்வி, வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் பெ.விஸ்வநாதன், த.லோகேஷ் தமிழ்செல்வன், நெ.மரிய வில்சன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் மற்றும் துறைகள் சார்ந்த செயலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய திட்டங்கள், துறைகளின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன்படி உயர்கல்வித் துறை சார்ந்த ஆலோசனையில், ஆசிரியர் காலிப் பணியிங்களை நிரப்புவது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டுமென அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதவிர வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை போல், தமிழக உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை முன்னெ
டுக்கலாம் என்பது தொடர்பாகவும், கல்லூரிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பல்கலைக்கழங்களின் நிதிநிலையை சரிசெய்யவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து துறை வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் வரும் ஜூலை 22-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
முதல்வர் விஜய் ஜூலை 10-ல் கரூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்