மாமல்லபுரம்: புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், தினமும் 110 எம்எல்டி மற்றும் 150 எம்எல்டி உற்பத்தித் திறன் கொண்ட 2 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதன்மூலம், தென்சென்னை பகுதிகளில் வாழும் சுமார் 20 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். மேலும், பொதுமக்களின் கூடுதல் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பேரூர் பகுதியில் ரூ.5,814 கோடியில், தினமும் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவானது.
இத்திட்டப் பணிகளை 2023-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அந்தப் பகுதியில் குடிநீர் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமான பணிகள் மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் ஆலைகளை முதல்வர் விஜய் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் உற்பத்தி திறன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும்,ஆலையின் கட்டுமானப் பணிகள் மற்றும் பேரூரில் இருந்து போரூர் வரை 59 கிலோ மீட்டருக்கு குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்பு திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், நெம்மேலியில் தற்போது உள்ள ஆலைகளைச் சிறந்த முறையில் பராமரித்து, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும் அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்த புதிய பேரூர் ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 22.67 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் த.சரத்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதற்கிடையே ஆலையின் முகப்புப் பகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருந்தது. அதிலிருந்த ஸ்டாலின் பெயர் அகற்றப்பட்டதாக கூறி திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், ஆலை நிர்வாகம் பராமரிப்புப் பணிகளுக்காக பெயர் அகற்றப்பட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்ததும் மீண்டும் பெயர் பொறிக்கப்படும் எனவும் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

More Stories
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை