புதுடெல்லி: இத்தாலியில் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான இத்தாலி கடந்த 1946-ம் ஆண்டில் குடியரசாக மாறியது. இதன்பிறகு கடந்த 80 ஆண்டுகளில் அங்கு 68 அரசுகள் ஆட்சி நடத்தி உள்ளன. கடந்த 2001 ஜூன் 11-ம் தேதி முதல் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை இத்தாலியின் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்தார். அவர் 1,412 நாட்கள் அந்த நாட்டின் பிரதமராக நீடித்தார்.
அவரே இத்தாலியின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். அவர் நேற்று 1,413 நாட்களைக் கடந்து முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனியின் சாதனையை முறியடித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இத்தாலியின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் எனது நண்பர் மெலோனியை மனதார வாழ்த்துகிறேன். அவரது தலைமை மீது இத்தாலி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதன்காரணமாகவே அவர் மிக நீண்ட காலம் பிரதமராக நீடிக்கிறார்.
இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் நன்மைக்காக இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மெலோனி வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஐஎம்இசி வர்த்தக வழித்தட திட்டத்தை நிறைவேற்ற இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
மகாராஷ்டிர முழுவதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்பி அறிவிப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி
சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவ.10-ல் வெளியீடு