மீரட்: இன்ஸ்டாகிராம் பதிவு குறித்த மெட்டா எச்சரிக்கையால் இளைஞரின் தற்கொலையை போலீஸார் தடுத்துள்ளனர்.
உத்தர பிரதேச போலீஸாருக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு உள்ளது. இது, தற்கொலை தொடர்பான பதிவுகளைக் கண்டறிந்து, அதுகுறித்த எச்சரிக்கைகளை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீரட் நகரின் சர்தானா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர், ஜூன் 7-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வெள்ளை நிற திரவம் ஒன்றை குடிப்பது போல் தெரிந்தது. அந்த வீடியோவில், ‘இனி நீ உன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு’ என்ற செய்தியும் இருந்தது.
மாலை 6.53 மணிக்கு இந்தப் பதிவு குறித்து காவல் துறை தலைமையகத்தில் உள்ள சமூக ஊடக மையத்துக்கு மெட்டா நிறுவனம் தற்கொலை எச்சரிக்கையை அனுப்பி உள்ளது. காவல் துறை தலைமை இயக்குநரின் உத்தரவின் பேரில், அந்த மையம், கிடைத்த செல்போன் எண் மற்றும் இருப்பிட விவரங்களின் அடிப்படையில் உடனடியாக மீரட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது.
காவல் துறை மூத்த கண்காணிப்பாளரின் மேற்பார்வையில், சர்தானா போலீஸார் அந்த இளைஞரின் வீட்டுக்கு விரைந்து சென்றபோது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவருக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான திரவம் அடங்கிய பாட்டில் ஒன்றும் கண்டெடுத்துள்ளனர்.
போலீஸார், குடும்பத்தினரின் உதவியுடன் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீரானது.
காதலில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து கடும் மன உளைச்சலில் இருந்ததால் இந்த தீவிர முடிவை எடுக்க முயன்றதாக அந்த இளைஞர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய ஆலோசனைகளும், தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3,000-க்கும் மேற்பட்டோர்…
ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2026 வரை, இதுபோன்ற எச்சரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் உத்தர பிரதேசம் முழுவதும் 3,011 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

More Stories
நேருவின் சாதனை முறியடிப்பு – மோடிக்கு குடியரசு தலைவர், துணை தலைவர் வாழ்த்து
சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து ஓசூர் நகரை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி – ராகுல் காந்தியுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு