ஜெய்ப்பூர்: பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரை விட 40 மடங்குக்கும் அதிகமான இரும்பு பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பச்சபத்ரா பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (எச்பிசிஎல்) ராஜஸ்தான் ரிபைனரி லிமிடெட் (எச்ஆர்ஆர்எல்) சார்பில் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சுத்திகரிப்பு ஆலை சுமார் ₹79,459 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 4,500 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை மிகச் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் முதல் அதிநவீன பிஎஸ்-6 தரத்திலான பெட்ரோ கெமிக்கல் வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவர் கட்டுவதற்கு பயன்படுத்திய இரும்பின் அளவை விட 40 மடங்குக்கும் அதிகமான இரும்பு கொண்டு இந்த சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைந்துள்ளது. இத்திட்டம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 9 மில்லியன் மெட்ரிக் டன்களாகும்.
இதில், 1.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் ராஜஸ்தானின் மங்களா எண்ணெய் வயல்களிலிருந்து பெறப்படும். மீதமுள்ள 7.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும். இந்தச் சுத்திகரிப்பு நிலையம் பிட்டுமன், நாப்தா, பல்வேறு பெட்ரோகெமிக்கல் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும்.
இத்திட்டம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இந்தியா கொண்டுள்ள சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதோடு, ஏற்றுமதி திறனையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 487 கி.மீ நீளமுள்ள குழாய் வழித்தடம் இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை முந்த்ரா துறைமுகத்துடன் நேரடியாக இணைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த சுத்திகரிப்பு தொழிற்சாலையை இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

More Stories
Oppo Reno 16c ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
பரந்தூர் விமான நிலையப் பணிகள் நிறுத்தத்தால் 30% வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழில்!
தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,200 உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு