June 2, 2026

உயிர் பலி வாங்கிய அரசியல்? அதிமுக நிர்வாகி தற்கொலை: முதல்வர் விஜய்யை நேரடியாக குற்றம்சாட்டிய ஆர்.பி உதயகுமார்

அதிமுக நிர்வாகி மகேந்திரன் தற்கொலைக்கு முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல்தான் காரணம் என ஆர்.பி உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என வீடியோ பதிவை வெளியிட்டு தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் மகேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் தற்கொலைக்கு முதல்வர் விஜய்யின் ன் குதிரை பேர அரசியல் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

மேலும் முதலமைச்சர் கைக்கூலியை வைத்துக் கொண்டு அதிமுகவினரிடம் ஆசை வார்த்தை காட்ட வேண்டாம். முதல்வர் விஜய் நடத்தி வருகிற நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலி போயிருக்கிறது எனவும் காட்டமாக பேசியுள்ளார்.

  

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், “புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்கள் தோற்றுவித்த அதிமுகவை எடப்பாடியார் கட்டிக்காத்து வருகிறார் எந்த பதவி சுகத்தையும் அனுபவித்திராத எங்கள் உயிர் மகேந்திரன் கழகம் காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார்” என உருக்கமாக பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தமிழர் குலசாமி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடியார் என்று மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் கழக மேடைகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விசுவாச தொண்டன் உச்சரித்த போது அது வெறும் வார்த்தைகள் அல்ல வரலாறு என்பதை நிரூபித்து காட்டியிருக்கிற உறுதி செய்து காட்டி உலகத்திற்கு உணர்த்தி இருக்கும் மகேந்திரன் ஆன்மா சாந்தி அடையட்டும்” எனவும் அவர் பேசியிருக்கிறார்.

முதல்வருக்கு கண்டனம்

தொடர்ந்து அவர், “ ஆட்சி அதிகாரத்தை பிடித்திருக்கிற முதல்வர் அவர்களே அதிகாரத்தையும் பணத்தையும் காட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விசுவாச உண்மை தொண்டர்களை விலை பேச முடியாது என்பதை இந்த உயிர் தியாகத்தின் மூலமாக நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறோம்” என கடுமையான விமர்சனங்களை பகிர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து “ இனிமேலாவது உண்மை தொண்டர்களை விலை பேசுவதை நிறுத்திவிடுங்கள், உங்கள் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு நீங்கள் நடத்தி வருகிற நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலி போயிருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் “ உங்கள் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு முதல்வர் அவர்களே கழகத்தின் விசுவாச தொண்டர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அதிகாரமும் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலே பங்கு, பணத்திலே பங்கு கொள்ளையிலே பங்கு என்று நீங்கள் கூத்தடிக்கிற இந்த கொடுமை காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் விசுவாச தொண்டன் தம்பி மகேந்திரன் தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார்” எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து ஆர்.பி உதயகுமார், “ ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது முதல்வர் அவர்களே, காலம் மாறும் காட்சிகள் மாறும் ஆட்சிகள் மாறும், மகேந்திரன் போன்ற கோடிக்கணக்கான விசுவாசதொண்டர்களை கொண்டு இருக்கிற எடப்பாடியார் தலைமையிலே மீண்டும் அதிமுக எழுகிற காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆகவே கோடிக்கணக்கான மகேந்திரன் போன்ற விசுவாச தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்று எங்களால் சொல்ல முடியவில்லை” மேலும் “ கழகத் தொண்டர்களின் உணர்ச்சியை இனியும் தூண்டி விடாதீர்கள் இப்போதாவது நீங்கள் இந்த அதிகாரம் ஆட்சி பதவி பட்டம் என்று நடத்துகிற அந்த கூத்துகளுக்கு எல்லாம் அந்த கூப்பாடுகளுக்கு எல்லாம் முடிவுரை எழுதுங்கள்: தடை ஏற்படுத்துங்கள் இல்லை என்றால் விளைவுகள் விபரீதமாக அமையும்”எனவும் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “ அதிமுக சந்திக்காத வெற்றி இல்லை, பின்னடைவு இல்லை, எடப்பாடியார் தலைமையிலே நாம் மீண்டும் எழுவோம் சந்தேகம் வேண்டாம் கவலையும் வேண்டாம் வருத்தமும் வேண்டாம்” என அவர் தொண்டர்களுக்கு ஊக்கம் அழிக்கும் வகையில் பேசியிருந்தார். ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு’ நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள்வரும்போது அங்கு சிரிப்பது யார் அழுவது யார் தெரியும்” என பேசியிருக்கிறார்.

நம்பிக்கை

மேலும் அவர் பேசுகையில், “போர்க்களத்திலே எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்கக்கூடாது. நம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, விசுவாசம்வேண்டும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும்” என அவர் கூறினார்

Spread the love