புதுடெல்லி: சமீப காலமாக ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் டாக்சி முன்பதிவின்போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரைவாக டாக்சி கிடைக்கக் கூடுதல் கட்டணம் செலுத்துங்கள்’ போன்ற அம்சங்களைச் செயலியில் புதிதாக சேர்த்தன.
இதன் மூலம், கூடுதல் பணம் அளித்தால் மட்டுமே ஓட்டுநர்கள் சவாரியை ஏற்றுக்கொள்வார்கள் என்ற தவறான எண்ணம் பயணிகள் மத்தியில் நிலவுவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டின் மோட்டார் வெகிக்கிள் அக்ரிகேட்டார் விதிமுறைகளை பின்பற்றி, அனைத்து ஆன்லைன் டாக்சி நிறுவனங்களும் தங்கள் செயலிகளில் டிப்ஸ் தொடர்பான மாற்றங்களை உடனடியாக செய்யுமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளையில், டாக்சி ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் வழங்குவதற்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதிக்கவில்லை. பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ஓட்டுநரின் சேவைக்குப் பயணிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் ‘டிப்ஸ்’ வழங்கிக் கொள்ளலாம். அப்படி பயணிகள் அளிக்கும் டிப்ஸ் தொகையில் இருந்து எவ்விதப் பிடித்தமும் செய்யக் கூடாது.
சுருக்கமாகச் சொன்னால், பயணம் முடிந்து ஓட்டுநரின் சேவையைப் பாராட்டி டிப்ஸ் வழங்கலாமே தவிர, டாக்சி சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சவாரிக்கு முன்பே கட்டாயப் பண வசூல் போல டிப்ஸ் கேட்கக் கூடாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

More Stories
ஈரான் போர் எதிரொலி.. ஒரே ஆண்டில் மூன்றாம் முறை உயர போகும் வீட்டு உபயோக சாதனங்களின் விலை.!!
ஊழியரின் பிஎப் பங்களிப்பு ரூ.3,917 ஆக உயர்கிறது – மாத சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு தாக்கம்
தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.1,880 குறைவு