கோவை: கோவை குறிச்சிக்குளத்தில் அரிய வகை பறவையான கழுத்துப்பட்டை பிராட்டின்கோல் பறவைகள் வலசை வந்துள்ளன.
கோவை குறிச்சிக்குளத்தில் கரண்டி அலகுப் பறவைகள், கருஞ்சிறகு கொக்குகள், பசிபிக் பொன் பிளவர், திபெத்திய பிளவர், கென்டிஷ் பிளவர், கரு
வால் கோட்விட், டெம்மின்க்ஸ் ஸ்டிண்ட், மீசை ஆலா மற்றும் பிற நீர்ப்பறவைகளுக்கு மத்தியில், இறகுகளுடன் கூடிய 3 கழுத்துப்பட்டை பிராட்டின்கோல் பறவைகள் காணப்பட்டன.
பறவை ஆர்வலர்கள் பார்வதி ரவிக்குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பறவையை அடையாளப்படுத்தினர். பறவையியல் நிபுணர் கஜமோகன்ராஜ், கோவை இயற்கை கழக உறுப்பினர்கள் கள ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, இது ‘காலர்டு பிராட்டின்கோல்’ என்பதையும், அரிய ரகம் என்பதையும் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “கழுத்துப்பட்டை பிராட்டின்கோல் மத்திய ஆசியா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் குஜராத் உட்பட, தனது இனப்பெருக்கப் பகுதிகளில் தோன்றி, பின்னர் தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப இந்தியாவிற்கு வலசை வந்துள்ளது.
இந்த ரக பறவைகள் தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி மற்றும் மதுரையில் கடந்த காலங்களில் தென்பட்டுள்ளன. தற்போது குறிச்சிக்குளத்தில் 3 பறவைகளை பார்த்தோம்.
உலகளாவிய புவி மாற்றங்கள் மனிதர்களை மட்டுமின்றி, பறவைகளையும் திக்குமுக்காட வைக்கின்றன. அரிய வகையான இந்த பறவை கோவை குளத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்றனர்.

More Stories
செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும் பட்டாம்பூச்சி மாதம்: பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக திகழும் பட்டாம்பூச்சிகள்
கோவையில் ‘விதை விநாயகர்’ சிலைகள் விற்பனை தீவிரம்
தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹிக்கு சர்வதேச அங்கீகாரம்!