சென்னை: பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீதும், சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்கும் பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் துறையினருடன், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இணைந்து, சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்காக 300 தடுப்பான்களை (பேரிகார்டுகள்) வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, ஹுண்டாய் நிறுவனம் வழங்கிய 200 இரும்பு தடுப்பான்கள், 50 ஸ்டீல் தடுப்பான்கள் மற்றும் 50 மடிக்கக்கூடிய தடுப்பான்கள் என மொத்தம் 300 பாதுகாப்பு தடுப்பான்களைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையாளர் கூறியதாவது: சென்னையில் சாலைப் பாதுகாப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற பல்வேறு சமூகநலப் பணிகளை மேற்கொண்டும் வருகிறோம்.
‘பாதுகாப்பான சாலைகள், பாதுகாப்பான உயிர்கள்’ என்ற தொலை நோக்கு இலக்கை அடைவதில் சென்னை பெருநகர காவல் துறை எப்போதும் உறுதியாகச் செயல்படும்.
சென்னையில் கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பைக் ரேஸில் ஈடுபட்ட 17 வயது இளஞ்சிறார்கள் உட்பட தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அவர்களின் சொந்த உயிருக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
பிறரை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, சிறுவர்களுக்கு வாகனம் ஓட்டக் கொடுத்தால் பெற்றோர்கள் அல்லது வாகன உரிமையாளர்கள் மீதும் அதே நடவடிக்கை பாயும். இவ்வாறு காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி, இணை ஆணையர் பகலவன், துணை ஆணையர் மெஹலினா ஐடன், ஹுண்டாய் மோட்டார் இந்தியா முழு நேர இயக்குநரும், தலைமை உற்பத்தி அதிகாரியுமான சி.எஸ்.கோபால கிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் யங்மியுங் பார்க் மற்றும் தலைவர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கம்யூனிஸ்ட் உறுப்பினர் விவரம் சேகரிக்க கூறிய குஜிலியம்பாறை வட்டாட்சியர் சென்னைக்கு பணியிட மாற்றம்
ஒப்பந்ததாரரின் ஆடியோ வெளியான நிலையில் வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகார்: மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை