பெய்ஜிங்: சீனாவில் முதல்முறையாக மனிதர்களால் இயக்கப்பட்ட மின்சார விமான பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
சீனாவின் வணிக விமானக் கழகம்(சிஓஎம்ஏசி), சீனா ஏவுவாகன தொழில்நுட்பக் கழகம், ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மின்சார விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிஇ-25ஏ என்ற இந்த விமானம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஆளில்லாமல் பறக்கவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் சனிக்கிழமை அன்று இந்த விமானம் மனிதர்கள் மூலம் இயக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையின்போது விமானத்தில் 2 விமானிகள், ஒரு விமான சோதனைப் பொறியாளர் என 3 பேர் இருந்தனர். சோதனையின்போது அனைத்து செயல்பாட்டு அளவுகோல்களும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நீடித்தன. அப்போது விமானம் 16 நிமிடங்களுக்கும் மேலாக பறந்து 60.4 கி.மீ. தூரத்தைக் கடந்தது. நகரங்களுக்கு இடையே யான போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 19 பயணிகள் செல்ல முடியும். இதன் அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 10 டன். இது மணிக்கு 300 கி.மீ. வரையிலான பறக்கும் வேகத்தையும், ஒற்றை சார்ஜில் 400 கி.மீ. தூர வரம்பையும் கொண்டுள்ளது.
சீனாவின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் இந்த விமானத்தின் வடிவமைப்பை ஏற்றுள்ளதன் மூலம் அதன் வணிக ரீதியான அடுத்த படிக்கு நகர்ந்துள்ளது. இதன்மூலம் மின்சார விமானத்துறை வளர்ச்சியில் சீனா முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்