October 6, 2026

செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 4.8 மடங்கு அதிகரிப்பு: ஆகஸ்டில் 98 பேர், செப்டம்பரில் 469 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு: டெங்கு காய்ச்​சல் பாதிப்பு செங்​கல்​பட்டு மாவட்டத்​தில் ஒரே மாதத்​தில் 4.8 மடங்கு அதி​கரித்​துள்​ளது.

ஆகஸ்ட் மாதத்​தில் 98 பேர் பாதிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், செப்டம்​பர் மாதத்​தில் இந்த எண்​ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மழைக்​காலத்​தில் டெங்கு தடுப்பு நடவடிக்​கைகளை தீவிரப்​படுத்த வேண்​டிய அவசி​யம் ஏற்பட்டுள்ளது. சுகா​தா​ரத் துறை புள்​ளி​விவரங்​களின்​படி, இம்மாவட்​டத்​தின் அனைத்து பகு​தி​களி​லும் பாதிப்பு உயர்ந்துள்ளது.

தாம்​பரத்​தில் அதிக பாதிப்பு: தாம்​பரம் மாநக​ராட்​சி​யில் ஆகஸ்ட் மாதத்​தில் 35 பேர் பாதிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், செப்டம்​பரில் 247 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இது 7 மடங்​குக்​கும் அதி​க​மான உயர்​வாகும். மாநக​ராட்​சி​யின் 4-வது மண்​டலத்​தில் அதி​கபட்​ச​மாக 69 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

கிராமப்​புறங்களில் பாதிப்பு 53-ல் இருந்து 172 ஆக உயர்ந்​துள்​ளது. புனித தோமை​யார் மலை வட்​டாரப் பகு​தி​யில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்​சிகளில் பாதிப்பு 7-ல் இருந்து 40 ஆகவும், பேரூ​ராட்​சிகளில் 3-ல் இருந்து 10 ஆகவும் உயர்ந்​துள்​ளது. கூடு​வாஞ்​சேரி நகராட்​சி​யில் மட்​டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை​யால் வீடு​கள், காலி மனை​கள், கட்​டு​மானப் பகு​தி​கள், பள்ளி வளாகங்​கள் மற்​றும் பொது இடங்​களில் தண்​ணீர் தேங்கினால், கொசுப்​புழு உற்​பத்​திக்​கான வாய்ப்பு அதிகரிக்கலாம். இதையடுத்து உள்​ளாட்​சிகள் சார்​பில் கொசுப்​புழு ஒழிப்பு மற்​றும் தூய்​மைப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. மழைநீர் கால்​வாய்​கள் தூர்​வாரப்​பட்​டு, தேங்​கிய மண் மற்​றும் குப்பை போன்​றவை அகற்​றப்​பட்​டுள்​ளன. பள்ளிகளில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்​புணர்வு நடவடிக்கைகளும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

பாதிப்பு அதி​கம் உள்ள பகு​தி​களில் வீடு வீடாகச் சென்று கொசுப்​புழு உற்​பத்தி இடங்​களைக் கண்​டறிந்து அழித்​தல், தேவை​யான இடங்​களில் புகை மருந்து அடித்​தல், காய்ச்​சல் பாதிப்​பைக் கண்​காணித்​தல் உள்​ளிட்ட பணி​களைத் தீவிரப்​படுத்த சுகா​தா​ரத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக்​காலத்​தில் குடிநீர் ஆதா​ரங்​கள் மாசடை​யும் வாய்ப்​புள்​ள​தால், முறை​யான குளோரினேஷன் மேற்கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. டெங்கு மட்​டுமின்​றி, டைபாய்டு உள்​ளிட்ட நீர்​வழி நோய்​களைத் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

விழிப்​புணர்வு அவசி​யம்: இதுகுறித்து சமூக ஆர்​வலர் இளங்கோ கூறிய​தாவது: மழைக்​காலங்​களில் சில பகு​தி​களில் மழைநீர் மற்றும் கழி​வுநீர் தேங்​கு​வ​தால் கொசுத் தொல்லை அதிகரிப்பதாக பொது​மக்​கள் தெரிவிக்​கின்​றனர். காய்ச்​சல் ஏற்பட்​டால் சுய​மாக மருந்​து, மாத்​திரைகள் உட்​கொள்​வதைத் தவிர்த்​து, மருத்​து​வரை அணுக வேண்​டும். காய்ச்​சலுக்​கான காரணத்தை மருத்​து​வப் பரிசோதனை மூலம் கண்​டறிந்​து, அதற்கேற்ப சிகிச்சை பெறு​வது அவசி​யம். இதுகுறித்த விழிப்​புணர்வை பொது​மக்​களிடம் ஏற்​படுத்த வேண்​டும்.

மழைக்​காலத்​தில் கொசுப்​புழு ஒழிப்​பு, தூய்​மைப் பணி மற்​றும் காய்ச்​சல் கண்​காணிப்பு நடவடிக்​கைகளை தொடர்ந்து மேற்​கொள்​வதுடன், பொது​மக்​களும் தங்​கள் சுற்​றுப்​புறங்​களில் தண்ணீர் தேங்​காமல் பார்த்​துக்​கொள்​வது உள்​ளிட்ட தடுப்பு நடவடிக்​கை​களில் ஒத்​துழைக்க வேண்​டும். மாவட்ட நிர்​வாக​மும் உள்​ளாட்சி அமைப்​பு​களும் தடுப்பு நடவடிக்​கைகளை தொடர்ந்​து ஒருங்​கிணைந்​து மேற்​கொள்​ள வேண்​டும்​ என்​று அவர்​ கூறி​னார்​.

Spread the love